வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அபாரம்

கிங்ஸ்டன்: மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 225 ரன் மட்டும் எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்று 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் கிங்ஸ்டனில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங் தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணிக்காக 100 வது டெஸ்டில் களமிறங்கினார் மிட்சல் ஸ்டார்க். மெக்ராத்துக்கு (124) அடுத்த இம்மைல்கல்லை எட்டிய இரண்டாவது ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆனார்.
ஆஸ்திரேலிய அணிக்கு கான்ஸ்டாஸ் (17), கவாஜா (23) ஜோடி துவக்கம் தந்தது. கேமரான் கிரீன் (46), ஸ்டீவ் ஸ்மித் (48) என இருவரும் அரைசத வாய்ப்பை இழந்து திரும்பினர். டிராவிஸ் ஹெட் 20 ரன் மட்டும் எடுத்தார். அலெக்ஸ் கேரி (21), கம்மின்ஸ் (24) சற்று கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 200 ரன்களை கடந்தது.
முதல் இன்னிங்சில் 225 ரன்னில் ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமார் ஜோசப் 4, ஜேடன் சீலஸ் 3, கிரீவ்ஸ் 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் 16/1 ரன் எடுத்திருந்தது. ஆண்டர்சன் (3), கேப்டன் ராஸ்டன் சேஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர்.

Advertisement