இந்திய அணிக்கு 193 ரன்கள் இலக்கு; வாஷிங்டன் சுந்தர் அபாரம்

லார்ட்ஸ்: இந்தியாவுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம், 193 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கில் தலைமையிலான இளம் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் இருபோட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமநிலை வகிக்கிறது.
இந்த சூழலில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லார்ட்சில் கடந்த 10ம் தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 387 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணியும், கே.எல்.ராகுலின் சதத்தினால் 3ம் நாளில் 387 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இதன்மூலம், லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே ரன்களை அடித்திருப்பது முதல்முறையாகும்.
4ம் நாள் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி பேட்டர்கள், இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தனர். மதிய உணவு இடைவேளை வரையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, மீண்டும் போட்டி தொடங்கியதும், ரூட் (40) மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் (33) ஆகியோர் ஓரளவுக்கு தாக்கு பிடித்தனர். அவர்களின் விக்கெட்டை வாஷிங்டன் சுந்தர் கைப்பற்றினார்.
அந்த பிறகு வந்த இங்கிலாந்து பேட்டர்கள், ஒருபுறம் பும்ராவின் வேகத்தையும், மறுபுறம் வாஷிங்டன் சுந்தரின் சுழலையும் சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தனர். இதனால், 192 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட்டானது. 38 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்தது. இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், பும்ரா, சிராஜ் தலா 2 விக்கெட்டுகளும், நிதிஷ் ரெட்டி, ஆகாஷ் தீப் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
193 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த இலக்கை அடையும் பட்சத்தில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெறலாம்.
மேலும்
-
சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுவன் பலி
-
உருக்குலைந்த எண்ணுார் துாண்டில் வளைவுகளால் ஆபத்து
-
வள்ளுவருக்கு காவியடித்து திருட பார்க்கின்றனர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பொக்லைன் இயந்திரம் கார் மீது விழுந்து விபத்து
-
தண்ணீர் பாட்டிலில் பல்லி சுத்திகரிப்பு நிலையம் முற்றுகை
-
பெரியபாளையத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்