வள்ளுவருக்கு காவியடித்து திருட பார்க்கின்றனர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூலை 14-
''இன்றைக்கு வீரியத்துடன், அரசியல் பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து கொண்டிருக்கிறோம். எத்தகைய படையெடுப்புகளையும் வெல்லும் திறன் தமிழுக்கு இருக்கிறது. வள்ளுவருக்கு சிலர் காவியடித்து திருடப் பார்க்கின்றனர்,'' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
கவிஞர் வைரமுத்து எழுதிய, 'வள்ளுவர் மறை, வைரமுத்து உரை' நுால் வெளியீட்டு விழா, சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. நுாலின் முதல் பிரதியை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
திருக்குறள் இரண்டு அடி தான். ஆனால், 2,000ம் ஆண்டுகளுக்கு மேலாக, உலக மக்களுக்கு புதுவழியை நல்வழியை சொல்லக்கூடிய உலக இலக்கியமாக உயர்ந்து நிற்கிறது. அதனால் தான் ஏராளமானோர் உரை எழுதி உள்ளனர்; அந்த வரிசையில் வைரமுத்து இணைந்திருக்கிறார்.
வள்ளுவர் புலவர் மட்டுமல்ல; புரட்சியாளர்; கவிஞர் மட்டுமல்ல; கலகக்காரர். அவர் வழங்கியிருக்கும் வள்ளுவத்தை பரப்ப வேண்டியது நம் கடமை மட்டுமல்ல; காலத்தின் தேவை.
சொந்தம் கொண்டாட, ஆரியத்தில் ஆள் இல்லாத காரணத்தால், வள்ளுவருக்கு காவியடித்து திருடப் பார்க்கின்றனர். திருட என்பதை விட, ஏமாற்றப் பார்க்கின்றனர் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.
திருவள்ளுவரை அபகரிக்க நினைத்தால், அவரது கருத்துகளின் வெப்பமே, அவர்களை பொசுக்கிவிடும். திருக்குறளை படித்தால் மட்டும் போதாது; அதன்படி நடக்க வேண்டும் என்ற உணர்வை இளைஞர்களுக்கு ஊட்ட வேண்டும். இதற்காக, தி.மு.க., அரசு ஏராளமான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
குறள் நீதி இருக்கும் இடத்தில், மனு நீதி தழைக்க முடியாது. அதற்கு வைரமுத்து உரை அடித்தளமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
மொழி வாழ்ந்தால் இனம் வாழும்; மொழி வீழ்ந்தால் இனம் வீழும். இது தான் உலக வரலாறு நமக்கு தந்திருக்கும் பாடம்.
இன்றைக்கு நாமும் வீரியத்துடன் அரசியல் பண்பாட்டு படையெடுப்பை எதிர்த்து கொண்டிருக்கிறோம். எத்தகைய படையெடுப்புகளையும் வெல்லும் திறன் தமிழுக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், ''திருக்குறளுக்கு உரை என்பது புதிதல்ல. பரிமேலழகர், மு.வரதராசனார், கருணாநிதி என பலரும் உரை எழுதி உள்ளனர். திருக்குறள் அறநுால் மட்டுமல்ல; சமயம் சாராத அறநுால் என்ற தனிச்சிறப்பும் அதற்கு உண்டு.
''தத்துவ அறிஞர்கள் அரிஸ்டாட்டில், பிளாட்டோ ஆகியோரை விட, திருவள்ளுவர் மூத்தவர். தமிழ் மொழி பேசும், எழுதும், வாழும் மொழியாக உள்ளது.
''வைரமுத்து, அனைத்து குறள்களின் உரைகளுக்கும், தமிழ் மரபு சார்ந்து எழுதி உள்ளார். கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்திற்கு, 'அறிவு வணக்கம்' என்ற தலைப்பிட்டு, தன் அடிப்படை நம்பிக்கையை விவரித்துள்ளார்,'' என்றார்.
முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, பேராசிரியை பர்வீன் சுல்தானா வாழ்த்துரை வழங்கினர்.
@block_B@
விழாவில், கவிஞர் வைரமுத்து பேசியதாவது: முன்பு நாற்றம் என்பதற்கு நறுமணம் என்று பொருள். இன்றைக்கு நாற்றம் என்றால் கூவம் என்று ஆகிவிட்டது. அதேபோல், காமம் என்பது தொல்காப்பியர் காலத்தில் நல்ல பொருளில் ஆளப்பட்டது. இன்று, இழிந்த பொருளாக மாறிவிட்டது. எனவே, திருவள்ளுவருக்கு இழிவு ஏற்படக்கூடாது என்பதற்காக, காமத்து பாலை இன்பத்து பால் என்றேன். திருக்குறளுக்கு கருணாநிதி உட்பட, 850 பேர் உரை எழுதியுள்ளனர்; நான், 851வது ஆளாக எழுதி இருக்கிறேன். சிறுவயதில் இருந்தே திருக்குறளை நேசித்து இருக்கிறேன். பல குறள்களுக்கு பிழைபட்ட பொருளை, இந்த சமூகம் சொல்லி வந்துள்ளது. அதனால், குறளுக்கு உரை எழுத ஆசைப்பட்டேன். 'உயிர் நீப்பின் மயிர் நீப்பின்' என்ற குறளில், கவரிமான் என்ற விலங்கு இருக்கிறது; ஒரு மயிர் உதிர்ந்தாலும் அது இறந்துவிடும்; அதுபோல மானமுள்ளவர்கள் கவரிமானை போன்றவர்கள்; மானத்திற்கு இழுக்கு வந்தால் இறந்து விடுவர் எனக் கூறி, 2,000ம் ஆண்டுகளாக பிழை நிகழ்ந்துள்ளது. திருவள்ளுவர் கவரிமான் என்று கூறவில்லை; 'கவரிமா' என்று குறிப்பிட்டுள்ளார். கவரிமா என்பது பனி பிரதேசத்தில் வாழும் விலங்கு; திபெத், நேபாளத்தில் இன்னும் இருக்கிறது. அதன் உடம்பெல்லாம் கம்பளியை போர்த்தியது போல மயிர் இருக்கும். அவை மொத்தமாக உதிர்ந்துபோனால், குளிரில் விறைத்து செத்துபோகும் என்பதே அதற்கு பொருள். உக்ரைன், ரஷ்யா, பாலஸ்தீனம், இஸ்ரேல், ஈரான் போருக்கும் வள்ளுவர் குறள் எழுதி இருக்கிறார்.மத்திய அரசுக்கு ஒரு குறள் சொல்லி இருக்கிறார். நம்மிடம் ஜி.எஸ்.டி., வசூலித்து, மற்ற மாநிலங்களுக்கு தருகின்றனர். எங்களுக்கும் பகிர்ந்து தர வேண்டும் என்பதற்கு, காக்கையை வைத்து வள்ளுவர் குறள் எழுதி இருக்கிறார். பொருந்தா கூட்டணிக்கும் குறள் எழுதி உள்ளார். எங்களுக்கு மிச்சமிருக்கும் அடையாளம் திருவள்ளுவர் தான். அவருக்கு காவி அடிக்கிறீர்கள். அவரை பறித்துக் கொண்டு போவதற்கு நாங்கள் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.block_B
மேலும்
-
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி காலமானார்
-
காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலி; தொழில்நுட்ப தவறு என காரணம் சொல்கிறது இஸ்ரேல்!
-
டில்லியில் மாயமான திரிபுரா மாணவி; 6 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு
-
அமெரிக்க சர்ச்சில் துப்பாக்கிச்சூடு; பெண்கள் இருவர் உயிரிழப்பு
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு