பொக்லைன் இயந்திரம் கார் மீது விழுந்து விபத்து

திருத்தணி,:திருத்தணி அருகே கன்டெய்னர் லாரியில் ஏற்றி வந்த பொக்லைன் இயந்திரம், சாலையோரம் சரிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் சித்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல், 22, என்பவர், நேற்று காரில் குடும்பத்துடன், திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு, மதியம் திருத்தணி -- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலை வழியாக, சித்துார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்.

கே.ஜி.கண்டிகை பஜார் அருகே சென்றபோது, ஆர்.கே.பேட்டையில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் இருந்த பொக்லைன் இயந்திரம், திடீரென லாரியில் இருந்து விழுந்து, எதிரே வந்த காரின் முன்பகுதியில் சரிந்து விழுந்தது.

இதில், காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர்தப்பினர்.

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். மேலும், கன்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement