சீனாவில் இப்படியும் ஒரு தாய்: ஆடம்பர வாழ்க்கைக்காக 2 குழந்தைகளை விற்ற பெண் கைது

பீஜிங்: சீனாவில் ஆடம்பரமாக வாழ்வதற்கு குழந்தைகளை பெற்று விற்பனை செய்த பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


சீனாவின் குவாங்சி மாகாணத்தை சேர்ந்தவர் ஹூவாங்(26). துவக்கப்பள்ளி படிப்பை மட்டும் முடித்துள்ளார். நிலையான வருமானம் இல்லாத அவர், வேலை தேடி பியுஜியான் மாகாணத்தில் உள்ள புஜூவு நகருக்கு வந்துள்ளார்.


கடந்த 2020ம் ஆண்டில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் உடன் இல்லை. இதனால் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும், குழந்தையை வளர்ப்பதற்கும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தையை விற்க முடிவு செய்தார். குடியிருந்த வீட்டின் உரிமையாளர் மூலம், 45 ஆயிரம் யுவானுக்கு ( இந்திய மதிப்பில் ரூ.5.37 லட்சம்) குழந்தையை விற்பனை செய்தார். அந்த பணத்தை கொண்டு ஆடம்பராக வாழ்ந்ததுடன், ஆன்லைனில் குறிப்புகளை வெளியிட்டு வந்தார்.


ஒரு கட்டத்தில் அந்த பணம் அனைத்தும் தீர்ந்து போனது. இதனையடுத்து என்ன செய்வது என தெரியாத அவர், மீண்டும் குழந்தை பெற்று விற்க முடிவு செய்தார். இதற்காக சில ஆண்களை தேடி அவர்களில் ஒருவர் மூலம் மற்றொரு ஆண் குழந்தை பெற்றார். இக்குழந்தையை 38 ஆயிரம் யுவானுக்கு( ரூ.4.54 லட்சம்) இடைத்தரகர் ஒருவரிடம் விற்றார். அவர் குழந்தையை 103,000 யுவான்( ரூ.12.31 லட்சம்) விற்பனை செய்தார்.

தற்போது கிடைத்த பணம் மூலம் ஹூவாங் ஆடம்பர வாழ்க்கை வாழ்வது, விலை உயர்ந்த ஆடைகளை வாங்குவது என பணத்தை செலவிட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அவரின் நடவடிக்கைகள் குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரணையை துவக்கினர். அதில், அவரது செயல்பாடு அனைத்தும் அம்பலமானது. அவரை கைது செய்த போலீசார், குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் அனுமதித்துள்ளனர்.


இவர் மீதான வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹூவாங்குக்கு 5. 2 மாத சிறையும், 30 ஆயிரம் யுவான்(3.50 லட்ச ரூபாய்) அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினர். மேலும், முதல் குழந்தையை விற்க உதவியவருக்கு 9 மாத சிறையும், வாங்கியவருக்கு 7 மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Advertisement