வங்கதேச அணி வெற்றி

தம்புல்லா: இரண்டாவது 'டி-20' போட்டியில் வங்கதேச அணி 83 ரன்னில் வெற்றி பெற்றது.
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி மூன்று 'டி-20' போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற இலங்கை அணி 1-0 என முன்னிலையில் இருந்தது. இரண்டாவது போட்டி நேற்று தம்புல்லாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பீல்டிங் தேர்வு செய்தார்.
லிட்டன் அபாரம்
வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (5), பர்வேஸ் ஹொசைன் (0) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. அடுத்து இணைந்த கேப்டன் லிட்டன் தாஸ், தவ்ஹித் ஜோடி வேகமாக ரன் சேர்த்தது. தீக்சனா பந்தை சிக்சருக்கு விரட்டிய லிட்டன் தாஸ், 39 பந்தில் அரைசதம் கடந்தார்.
மறுபக்கம் தவ்ஹித் 31 ரன் எடுத்தார். லிட்டன் 50 பந்தில் 76 ரன் எடுத்து, தீக்சனா பந்தில் அவுட்டானார். கடைசி நேரத்தில் ரன் வேகம் காட்டிய ஷமிம் ஹொசைன், 27 பந்தில் 48 ரன் எடுத்து, ரன் அவுட்டானார்.
வங்கதேச அணி 20 ஓவரில் 177/7 ரன் எடுத்தது. இலங்கை சார்பில் பினுரா பெர்னாண்டோ அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் (8), குசல் பெரேரா (0), அவிஷ்கா (2) அதிர்ச்சி கொடுத்தனர். 5 ஓவரில் 25/3 ரன் எடுத்து இருந்தது. நிசங்கா (32), ஷானகா (20) தவிர மற்ற யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. இலங்கை அணி 15.2 ஓவரில் 94 ரன்னில் சுருண்டு, தோற்றது.