காஸ் கசிவால் வீடு தீப்பிடிப்பு கர்ப்பிணி தாயுடன் மகள் காயம்
காஞ்சிபுரம்:காஸ் கசிவால், வீடு தீப்பிடித்து எரிந்ததில், கர்ப்பிணி தாயுடன் மகள் தீக்காயமடைந்தார்.
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 34; நெசவு தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி மணிமேகலை, 29. ஆறு மாத கர்ப்பிணி. பூ முடிக்க நேற்று முன்தினம் பிள்ளையார்பாளையம் லிங்கபாளையம் தெருவில் இருக்கும் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று, காலை 8:00 மணி அளவில், எட்டு வயது மகளுடன் மணிமேகலை குளியல் அறைக்கு சென்ற போது, சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது.
அக்கம் பக்கத்தினர் தீயை அனைத்து, அவசர ஆம்புலன்ஸ் வாகனத்தில் மணிமேகலை மற்றும் அவரது எட்டு வயது மகளை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இருவரையும் தீவிர சிகிச்சைக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீவிபத்து குறித்து, சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.