மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் அவசியம்

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி அலுவலகம் அருகே புதிதாக, நிழற்குடையுடன் கூடிய பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது.
இந்த வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக, மதுராந்தகம்- - சித்தாமூர் மாநில நெடுஞ்சாலையில், முதுகரை அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால், நகராட்சி அலுவலகம் உள்ள பகுதியில் பேருந்து நிறுத்தம் மற்றும் நிழற்குடை இல்லை.
இதனால், குருகுலம் மற்றும் முதுகரை பகுதி நிறுத்தங்களில் இறங்கி, நகராட்சி அலுவலகத்திற்கு வரவேண்டி உள்ளது.
இதன் காரணமாக நகராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பல்வேறு பணி காரணமாக வரும் பொதுமக்கள், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தில் வந்து செல்கின்றனர்.
எனவே, நகராட்சி அலுவலகம் அருகே பயணியர் நிழற்குடை அமைத்து, அனைத்து நகர பேருந்துகளும் அங்கு நின்று செல்ல, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.