ஐந்து அலுவலர்கள் பதவிகளை நீக்கி தலைமை பொறியாளர் பதவி உருவாக்கம்

சென்னை: மத்திய அரசு உத்தரவின்படி, தமிழகத்தில் மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்புக்கு, தலைமை பொறியாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஐந்து பதவிகள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 128 அணைகள் உள்ளன. இவற்றில், 90 அணைகள் நீர்வளத்துறை பராமரிப்பிலும், 38 அணைகள் மின் உற்பத்திக்காக, மின் வாரியத்தின் நேரடி பராமரிப்பிலும் உள்ளன.

நீர்வளத்துறையின் இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவு வாயிலாக அணைகள் பராமரிக்கப்படுகின்றன.

சென்னையை தலைமையிடமாக வைத்து, ஒரு தலைமை பொறியாளரின் கீழ் இப்பிரிவு செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, துறைக்கு புதிய வாகனங்கள் கொள்முதல் செய்தல், பழைய வாகனங்கள், பயனற்ற இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மத்திய அரசு 2021ம் ஆண்டு, மாநில அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

இதன்படி, 'மாநிலத்தில் அணைகளின் எண்ணிக்கை 30க்கு மேல் இருந்தால், மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். ஒரு தலைமை பொறியாளர் பதவிக்கு குறையாத அலுவலரின் கீழ், அந்த அமைப்பு செயல்பட வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பின்பற்றி, நீர்வளத்துறையின் அணைகள் பராமரிப்பிற்காக, அணைகள் பாதுகாப்பு அமைப்பை தமிழக அரசு உருவாக்கி உள்ளது. இதற்கு தனியாக, தலைமை பொறியாளர் பதவியை உருவாக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

இப்பதவிக்கான ஆண்டு செலவை ஈடுகட்டும் வகையில், திருநெல்வேலியில் ஒரு உதவி பொறியாளர், விழுப்புரத்தில் ஒரு 'டிராப்ட்மேன்' எனப்படும் இளநிலை வரைதொழில் அலுவலர், சென்னையில் இரண்டு உதவியாளர்கள், திருத்துறைப்பூண்டியில் ஒரு இளநிலை உதவியாளர் பணியிடம் உள்ளிட்டவை துறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன் பிறப்பித்துள்ளார்.

Advertisement