பருவ மழைக்கு முன் கால்வாய்களை துார்வாருங்கள்!: வெள்ள சேதத்தை தவிர்க்க கலெக்டர் உத்தரவு

திருவள்ளூர்:'திருவள்ளூரில் கடந்த காலங்களில் வெள்ளத்தால் மூழ்கிய பகுதிகளை பார்வையிட்ட கலெக்டர், வடகிழக்கு பருவமழைக்கு முன், அனைத்து நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டும்' என, நகராட்சி மற்றும் நீர்வளத்துறையினருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் நகரில் மழைநீர் வடிகால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. தற்போது, நகர் முழுதும் அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் வடிகால்வாயில் சேகரமாகும் தண்ணீர், வெளியேற்றுவதற்கான வழியும் இல்லை.

அவற்றை தேடுவதற்கான முயற்சியில், நீர்வளம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இதுவரை ஈடுபடாமல் அலட்சியமாக உள்ளனர்.

பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் துவங்கி, ஜே.என்.சாலை, அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக, வி.எம்.நகர், 100 அடி சாலையை கடந்து, காக்களூர் ஏரியில் சேரும் பொதுப்பணி துறை கால்வாய் உள்ளது.

மேலும், கலெக்டர் அலுவலகம் அருகே டோல்கேட்டில் துவங்கி, சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, குளக்கரை தெரு, பேருந்து நிலையம் வழியாக, காக்களூர் ஏரியை சென்றடையும் மற்றொரு நீர்வளத் துறை கால்வாய் உள்ளது.

இந்த இரண்டு கால்வாய் மட்டுமே, நகரின் கழிவு நீர் மற்றும் மழைநீரை வெளியேற்றும் பிரதான வடிகால்வாயாக உள்ளது. ஆனால், இந்த இரண்டு கால்வாய்களும் ஆக்கிரமிப்பு, துார்வாராததால், கழிவு பொருட்களால் அடைப்பு என, பல்வேறு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது.

இதன் காரணமாக, இவ்விரண்டு கால்வாய்களும் துார்ந்து, மழைநீர் வெளியேற வழியில்லாமல் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும், ஜெயா நகர், அம்சா நகர், ஏரிக்கரை குடியிருப்பு போன்ற பகுதிகளிலும் மழைநீர் வெளியேற வழியில்லை.

இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளாக பருவமழை காலத்தில், அம்சா நகர், ஜெயா நகர், அய்யனார் அவென்யூ, வி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சில மாதங்களில் துவங்கும் வடகிழக்கு பருவமழையின் போது, கனமழை பெய்தால் மழைநீர் வெளியேற வழியில்லாமல், மீண்டும் திருவள்ளூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை தவிர்க்கும் வகையில், நீர்நிலைகள், கால்வாய்களை துார்வார வேண்டும் என, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகங்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து, கலெக்டர் பிரதாப், திருவள்ளூர் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், வெள்ள சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படும் பகுதிகளை பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.

அதில் ஒருபகுதியாக, வி.எம்.நகர், ஜெயின் நகர், காக்களூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை பார்வையிட்டார். அப்போது, கால்வாய் துார்ந்து, செடிகள் வளர்ந்து காட்சியளித்தது.


இதையடுத்து, வடகிழக்கு பருவமழைக்குள் துார் வாரி சீரமைக்க வேண்டும். அப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, நீர்வளம், நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

பராமரிப்பு அவசியம்



கடம்பத்துார் ஊராட்சி வெண்மனம்புதுார் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளன. குப்பை கொட்டி, நீர்வரத்துக்கு தடையாக உள்ளது. இதே நிலை தான், ஒன்றியம் முழுதும் உள்ள நீர்வரத்து கால்வாய்களில் உள்ளது. கடந்தாண்டு மழைநீர் வெளியேற வழியில்லாமல், ஊருக்குள் புகுந்தது.

திருத்தணி நகராட்சியில், போதிய மழைநீர் வடிகால்கள் இல்லை. இருக்கும் கால்வாய்களும் உரிய பராமரிப்பு இல்லாததால் மண்ணிற்குள் புதைந்து சேதமடைந்துள்ளது. நகரில் மழைநீர் வடிகால்வாய்கள் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ளது. திருத்தணியில் ஒரு மணி நேரம் மழை பெய்தால், சாலைகளில் மழைநீர் தேங்கி விடும்.

திருத்தணி ம.பொ.சி.சாலை, சித்துார் சாலை, பைபாஸ், கீழ்பஜார் தெரு, பழைய தர்மராஜா கோவில் தெரு போன்ற இடங்களில் மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்கும். சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிடுகிறது. மழை காலத்திற்குள் இதை சீரமைக்க வேண்டும்.

திருவாலங்காடு ஒன்றியத்தில், கொசஸ்தலை ஆற்றில் மழை காலத்தில் ஏற்படும் வெள்ளம், விவசாய நிலங்களுக்குள் புகுந்து, பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், பொதுப்பணித் துறையினர் அலட்சியமாக உள்ளனர்.

ஒவ்வொரு பருவமழை காலத்திலும், ஆரணி, கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஆரணி கிராமம், பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டு, கிராமத்திற்குள்ளும், விவசாய நிலத்திற்குள்ளும் புகுந்து விடுகிறது.

இதற்காக, கடந்தாண்டு துவங்கிய கரை பலப்படுத்தும் பணி, முழுமை பெறாமல் உள்ளது.

Advertisement