கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு

1

திருவனந்தபுரம்: கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்புக்கு 2வது உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், 6 மாவட்டங்களில் உச்சகட்ட மருத்துவ கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


பாலக்காட்டைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த 12ம் தேதி உயிரிழந்த நபருக்கு நிபா வைரஸ் தொற்று பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுந்தது. முன்னதாக அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரியை மஞ்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. அதில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


இதன்மூலம், கடந்த சில தினங்களில் மட்டும் நிபா வைரஸ் பாதிப்புக்கு ஏற்பட்ட 2வது உயிரிழப்பு இதுவாகும். முன்பு மலப்புரத்தைச் சேர்ந்தவர் நிபா வைரஸால் உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத்துறையினர் சேகரித்தனர். சி.சி.டி.வி., காட்சிகள், செல்போன் தொடர்புகளின் அடிப்படையில் 46 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மலப்புரம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், அநாவசியமாக மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் நிபா வைரஸ் அறிகுறிகள், தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்த விபரங்களை கொடுக்குமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இதுவரை நிபா வைரஸ் பாதிப்பு இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement