கூடலுார் நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை

கூடலுார்: கூடலுார் நெடுஞ்சாலையில் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் வாகன விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

கூடலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரையுள்ள மாநில நெடுஞ்சாலை இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருவழிச் சாலையாக அகலப்படுத்தப்பட்டது. கேரள எல்லைப் பகுதியில் உள்ளதால் வாகனப் போக்குவரத்து அதிகம். மேலும் அகலப்படுத்தப்பட்ட ரோடுகளில் டூ வீலர், கார், பஸ் என அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. கடந்த சில நாட்களாக நெடுஞ்சாலையில் நாய்கள் உலா வருவது அதிகரித்துள்ளது. டூவீலர்களில் செல்பவர்கள் நாய்கள் திடீரென குறுக்கே வரும்போது விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

நாய்களை கட்டுப்படுத்த கருத்தடை செய்வதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருகிறது. பழைய சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த கருத்தடை மையமும் பயன்பாடு இன்றி சேதமடைந்துள்ளது. இதனால் நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலையில் மிகப்பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன் நாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement