வாக்காளர் பட்டியல் திருத்த பணி சுப்ரீம் கோர்ட் பரிந்துரை சரியே!

பீஹார் மாநிலத்தில் தற்போது, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தலைமை தேர்தல் ஆணையம் திடீரென மேற்கொண்டு வருகிறது. பீஹார் மாநில வாக்காளர் பட்டியலில், அண்டை நாடுகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அதிகளவில் இடம் பெற்றிருப்பதாக, தேர்தல் ஆணையம் நம்புவதே இதற்கு காரணம்.
ஏற்கனவே, '2003ல் பீஹாரில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நடந்தது. அதன்பின், 10 தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டன. அப்படிப்பட்ட நிலையில், சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நேரத்தில், அவசரமாக இதைச் செய்ய வேண்டிய தேவை என்ன? மேலும், ஆதார் அட்டை போன்றவற்றை அடையாள ஆவணமாக எடுத்துக் கொள்ள முடியாது என, தேர்தல் ஆணையம் மறுத்தது, தன்னிச்சையான செயல்பாடு.
'எனவே, சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க வேண்டும்' எனக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொள்ள, அரசியல் சட்டப்படி தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆனாலும், பீஹாரில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?
'மேலும், ஒருவரின் குடியுரிமை பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தான் கேள்வி எழுப்ப வேண்டும். அதற்கான அதிகாரம், அந்த அமைச்சகத்திற்கு மட்டுமே உள்ளது எனும்போது, அதுபற்றி தேர்தல் ஆணையம் எப்படி கேள்வி எழுப்ப முடியும்' என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனினும், தலைமை தேர்தல் ஆணையம் பீஹாரில் நடத்தி வரும் வாக்காளர் தீவிர திருத்தப் பணிக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
அதே நேரத்தில், 'உண்மையான வாக்காளர்கள் எவரும், பட்டியலில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள். அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதி உள்ள வாக்காளர்களுக்கு அவர்களின் உரிமை நிலைநாட்டப்படும்' என, தேர்தல் ஆணையம் முன்வைத்த வாதத்தையும், உச்ச நீதிமன்றம் ஏற்றுள்ளது.
'தற்போதைய சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது, 2003-ம் ஆண்டுக்கு பின் வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள், இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்பு சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்தது, பலத்த விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பல வாக்காளர்களால் இந்த ஆவணங்களை பெறுவது சிரமம் என, எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனால், லட்சக்கணக்கானோர் ஓட்டுரிமை அற்றவர்களாக மாறுவர் என்றும் கவலை தெரிவித்துள்ளன.
இருப்பினும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை ஏன் சான்றாகப் பயன்படுத்தக் கூடாது என்பதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் சரியான பதில் இல்லை. எனவே, அந்த மூன்றையும் சரிபார்ப்பு ஆவணங்களாக தேர்தல் ஆணையம் கருத வேண்டும் என, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது சரியானதே.
வாக்காளர் பட்டியலை புதுப்பித்து, துல்லியமானதாக குறைபாடு இல்லாததாக மாற்ற, தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும், ஆவணமற்ற மக்கள், ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பின்தங்கிய ஜாதியினர் போன்றோர், ஆணையம் கேட்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களுக்கு சிரமம் தராமல், அவர்களுக்கு கவலையை உண்டாக்காமல், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை மேற்கொள்ள வேண்டும். அதுவே, சரியானதாகும்.
அடுத்ததாக, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள உள்ள தேர்தல் ஆணையம், இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையை பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.


மேலும்
-
கேரளாவில் நிபா வைரஸூக்கு 2வது பலி; 6 மாவட்டங்களில் உச்சகட்ட கண்காணிப்பு
-
சிறை காவலர்களுக்கு இருண்ட காலம்: கூடுதல் டி.ஜி.பி., மீது பகீர் குற்றச்சாட்டு
-
ஆவின் நிறுவனத்தில் வாயு கசிவால் பரபரப்பு
-
சதி திட்டம் தீட்டுபவர்கள்தான் ராமதாசிடம் உள்ளனர்; அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ., சிவக்குமார் பேட்டி
-
4 ஆண்டுகளாக ரவுடிகள் ராஜ்ஜியம் நடக்கிறது அ.ம.மு.க., தினகரன் சாடல்
-
கஷ்டத்தில் தி.மு.க., அரசு; அமைச்சர் நேரு வருத்தம்