77 ரயில்களின் சேவை பாதிப்பு

77 ரயில்களின் சேவை பாதிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மைசூருக்கு புறப்பட இருந்த வந்தே பாரத் விரைவு ரயில்; சதாப்தி விரைவு ரயில், கோவை விரைவு ரயில்; திருப்பதிக்கு புறப்பட வேண்டிய சப்தகிரி விரைவு ரயில் உட்பட எட்டு ரயில்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த எட்டு விரைவு ரயில்கள் அரக்கோணம், காட்பாடி, சேலம் உட்பட பல ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. காச்சிகுடா -- செங்கல்பட்டு விரைவு ரயில் உட்பட எட்டு ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி, 77 விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது; 16 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; 26 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

225 மின்சார ரயில்களின் சேவை முடக்கம்

சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில், தினமும் செல்லும் 225 மின்சார ரயில்கள் நேற்று மாலை வரை இயக்கப்படவில்லை. இருப்பினும், சென்ட்ரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் வரை, நேற்று மதியம் 12:00 மணிக்கு பிறகு, கணிசமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து ரயிலில் கோவை, பெங்களூரு செல்ல திட்டமிட்டிருந்த பயணியருக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோயம்பேடில் இருந்து பெங்களூருக்கு 25; கிளாம்பாக்கத்தில் இருந்து கோவைக்கு, 15 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களும் இயக்கப்பட்டன.

பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

மங்களூரு -- சென்னை சென்ட்ரல் விரைவு ரயில், நேற்று முன்தினம் மதியம் 1:55 மணிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

அதிகாலை 4:45 மணிக்கு அரக்கோணம் வந்தது; அடுத்து திருவள்ளூரை வந்தடையும். இதற்கிடையே, திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து, விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்ததை பார்த்த அந்த ரயில் ஓட்டுநர் ஆனந்த பிரதாப் ரெட்டி, உதவி ஓட்டுநர் சரவணன் ஆகியோர் ரயிலை மெதுவாக இயக்கி பாதுகாப்பாக நிறுத்தினர்.

அடுத்த சில வினாடிகளில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களுக்கு தகவல் வந்தது. தீ விபத்து நடந்த இடத்தில் இருந்து, 600 மீட்டர் துாரத்துக்கு முன், அந்த ரயில் நிறுத்தப்பட்டதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

கடினமான மீட்பு பணி

ரயில் தடம் புரள்வது போன்ற விபத்து நடக்கும் போது, மின் இணைப்புகளில் பிரச்னை இருக்காது. உடனே அவசரகால மின் இன்ஜின் வாயிலாக, விபத்துக்குள்ளான பெட்டிகளை அகற்றுவர்.

ஆனால், இந்த தீ விபத்தில் மின் வினியோகம் செய்யும் ஒயர்கள், கருவிகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. அதனால், டீசல் இன்ஜின் கொண்டு வரப்பட்ட பிறகே, விபத்துக்குள்ளான ரயிலில் இருந்த டேங்கர்கள் அகற்றப்பட்டன. தீயணைப்பு வாகனங்களும், அப்பகுதிக்கு சென்று தீயை அணைப்பது கடும் சிரமமாக இருந்தது.

உபயோகமில்லாத ரயில்வே உதவி எண்கள்

சரக்கு ரயில் தீ விபத்தால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 044 -- 2535 4151, 044 - 2435 4995 ஆகிய எண்களை பயணியர் தொடர்பு கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டால், இப்போது தொடர்பு கொள்ள முடியாது; நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும் என்ற தகவல் வந்தது, பயணியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement