உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு: கூடுதல் தலைமை செயலாளர் அமுதா உறுதி

10


சென்னை: ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும்; முகாம்கள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே மக்களிடம் தெரிவிக்கப்படும்'' என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்தார்.

தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ் குமார், அமுதா ஆகிய நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
நாளை தொடங்கப்பட உள்ள, 'உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே அரசின் சேவைகளை கொண்டு செல்வது இத்திட்டத்தின் நோக்கம். அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் மக்களுக்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.

1.01 கோடி மனுக்கள்



முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தெரியப்படுத்தப் படும். பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், மின் இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் வருகின்றன. இதுவரை 1.05 கோடி கோரிக்கை மனுக்கள் பெறப்பட்ட நிலையில் 1.01 கோடி மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.



மக்கள் அதிகமாக கூடுகிற, வசிக்கிற இடங்களில் முகாம்கள் நடத்த உள்ளோம். மக்களுக்கு நாம முகாம் நடத்துவது தெரியப்படுத்த, முகாம் நடத்துவதற்கு முன்பாக தன்னார்வலர்களை அனுப்பி சிறப்பு திட்ட முகாம் நடத்த உள்ளோம். 45 நாட்களில் இந்த மனுக்களுக்கான தீர்வு காண வேண்டும் என முதல்வர் கூறியிருக்கின்றார். அதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தி உள்ளோம்.

உடனடியாக தீர்வு



வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும். இதற்காக ஒரு லட்சம் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் வரை 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முன்பு 20,000 மக்கள் தொகைக்கு ஒரு முகாம் இருந்தது. இப்போது 10 ஆயரம் மக்கள் தொகைக்கு ஒரு முகாம். உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஆவணங்களை முறையாக கொண்டு வரும் மக்களின் மனு மீது உடனடியாக தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement