பகலில் காய்கறி விற்று இரவில் திருடியவர் கைது

போத்தனுார்; கோவை, கோவைபுதுாரில் வசிப்பவர் சாமுவேல்ராஜ். கடந்த, 9ம் தேதி இவரது வீட்டினுள் புகுந்த மர்ம நபர், 10 சவரன் தங்க நகைகள், 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றார்.

அதுபோல் அப்பகுதியிலுள்ள சதீஷ் என்பவரின் கடையிலிருந்து, ரூ.34 ஆயிரம் ரொக்கம் திருட்டு போனது. மேலும் ஐந்திற்கும் மேற்பட்ட வீடு, கடைகளிலும் திருட்டு போனது.

குனியமுத்துார் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு மர்ம நபரை தேடினர்.

இதில் குனியமுத்துாரில் சந்தேகத்திற்கிடமான வகையில், சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர்.

அந்நபர் துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, முத்துகிருஷ்ணன் என்பதும் கோவைபுதூர் பகுதியில் நடந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது.

முத்துகிருஷ்ணன் சென்னையில் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டில் திருடியது உள்பட, பல்வேறு திருட்டுகள் தொடர்பாக, சிறைக்கு சென்றுள்ளார்.

தற்போது கணபதியில் தங்கி, பகல் நேரத்தில் காய்கறி விற்றவாறு, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு, இரவில் திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. முத்துகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement