மகள்களுடன் வாழ விருப்பம் : கர்நாடக குகையில் மீட்கப்பட்ட ரஷ்ய பெண்ணின் கணவர் கண்ணீர்

3


பனாஜி: கர்நாடகாவில் குகையில் இருந்து மீட்கப்பட்ட ரஷ்ய பெண், தன்னிடம் எதுவும் சொல்லாமல் கோவாவில் இருந்து சென்று விட்டார் என அவரது கணவர் தெரிவித்துள்ளார். குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவின் ராமதீர்த்தம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் குகை ஒன்று அமைந்துள்ளது. விஷப்பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இது உள்ளது. இந்த பகுதிகளில் சுற்றுலா வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆய்வு செய்த போது, ஒரு பெண்ணின் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்தனர்.

அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது அவரது பெயர் நினா குடினா(40) என்பதும், ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்ததும் தெரியவந்தது. அவர், பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், நினா குடினாவின் கணவர் இஸ்ரேலை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் டிரார் கோல்ட்ஸ்டெயின் என்பதும் தெரியவந்துள்ளது

கோல்ட்ஸ்டெயின் கூறியதாவது: நினா குடினாவை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் பார்த்தேன். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இந்தியாவில் 7 மாதங்கள் வாழ்ந்தோம். பிறகு உக்ரைனில் அதிக நாட்கள் வாழ்ந்தோம்.

எனது மகள்களை பார்க்க கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தியாவுக்கு வந்து செல்கிறேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நினா குடினா என்னிடம் எதுவும் சொல்லாமல் கோவாவில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவர் எங்கு சென்றார் எனத் தெரியவில்லை. அவரை காணவில்லை என போலீசில் புகார் அளித்து இருந்தேன்.

தற்போது அவர் குகையில் தங்கியிருந்தது தெரியவந்தது.
மகள்களை பார்க்க கர்நாடகா சென்றேன். ஆனால், சிறிது நேரம் மட்டுமே நேரம் செலவிட நினா குடினா அனுமதித்தார்.

எனது மகள்களை என்னுடன் அழைத்து செல்ல விருப்பம் உள்ளது. பல மாதங்களாக, நினா குடினாவுக்கு பணம் அனுப்பி வந்தேன். தேவையானதை வாங்கும் திறன் நினா குடினாவுக்கு உள்ளது. எனது குழந்தைகள் ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன். ரஷ்யாவுக்கு சென்று விட்டால், அவர்களை மீட்பது கடினமாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement