கேரளாவில் அதிகரித்து வரும் நிபா வைரஸ்; வால்பாறையில் பரிசோதனை அவசியம்

வால்பாறை; கேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாநில எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், பரிசோதனை நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை, தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது. சுற்றுலா ஸ்தலமான வால்பாறைக்கு, அதிரப்பள்ளி வழியாக ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் நாள் தோறும் வந்து செல்கின்றனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மற்றும் பாலக்காடு பகுதியில், நிபா வைரஸ் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், இது மேலும் பரவாமல் தடுக்க, கேரள சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், கோவை மாவட்டம் வால்பாறையில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கையும், சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்படவில்லை.

பொதுமக்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாபயணியரை, மளுக்கப்பாறை சோதனை சாவடிகளில் மருத்துவபரிசோதனை செய்த பின், செல்ல அனுமதிக்க வேண்டும். சுகாதாரத்துறை அதிகாரிகள் தயக்கம் காட்டாமல், உடனடியாக சோதனை சாவடியில் நிபா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement