ரயில்வேயில் எந்த வேலைக்கும் தகுதி வாய்ந்த ஆள் இல்லை; ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ரயில்வேயின் முக்கிய பராமரிப்பு பணிகள் முடங்கிப் போய்க் கிடக்கிறது. எந்த வேலைக்கும் தகுதி வாய்ந்த ஆள் இல்லை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே உள்ள இருளர் காலனி மற்றும் வரத ராஜபுரம் ஆகிய இரண்டு கிராம மக்கள் ஊரையே காலி செய்கிற அளவு ரயில் விபத்தால் உண்டான தீயும், புகை மூட்டமும் இருந்துள்ளது. சென்னை மணலியில் இயங்கும் மத்திய அரசு நிறுவனமான ஐ.ஓ.சி.எல் நிறுவனத்தில் இருந்து பெட்ரோலிய எரி பொருட்களை ஏற்றிக்கொண்டு தென்னக சரக்கு ரயில் ஜோலார்பேட்டை நோக்கி (13.07.2025) ஞாயிற்றுக் கிழமை சென்றபோது தான் விபத்து நடந்திருக்கிறது.
விபத்தை தொடர்நது டீசலை நிரப்பியிருந்த ரயில் பெட்டிகளில் தீப்பிடித்து 10 மணி நேரத்துக்கு மேலாக மிக அடர்த்தியாகவே எரிந்துள்ளது. புகை மூட்டம், இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு காற்றில் விஷமாக கலந்து விட்டிருக்கிறது.
பொதுப் போக்குவரத்து கேள்விக்குறியாகி விட்ட நிலையில், மக்கள் தவித்துப் போயிருக்கிறார்கள். நேர்முகத் தேர்வு, மருத்துவம், திருமணம், தனி நபர், அரசு ஊழியர் அலுவல் பயணம் என எத்தனையோ மக்கள் பிரச்சினைகள்- அத்தனையும் சிதறிப் போயிருக்கிறது.
இதுபோன்று ரயில் விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம், இருப்பு பாதைகள் (ட்ராக்) சரியான சீரமைப்பில் இல்லாததும், உயர் அழுத்த மின் கம்பி பராமரிப்புப் பணிகளை முறைப்படுத்தாமல் இருப்பதும் தான். ரயில்வே துறையின் உயரதிகாரிகள் காட்டி வரும் அலட்சியமும் இதுபோன்ற தொடர் விபத்துகளின் பின்னணியில் இருக்கிறது.
ரயில்வே துறைக்கு என தனி பட்ஜெட் போடாமல், அதை பொது பட்ஜெட்டில் எப்போது மத்திய அரசு கொண்டு வந்ததோ அப்போதே, அனைத்து முக்கிய வேலைகளிலும் பெருந்தடை ஏற்பட்டுப் போனது. பொது பட்ஜெட்டில் ரயில்வே இருக்கும் காரணத்தால் போதிய நிதியுதவி கிடைக்க வழியின்றி, ரயில்வேயின் முக்கிய பராமரிப்பு பணிகள் முடங்கிப்போய்க் கிடக்கிறது. எந்த வேலைக்கும் தகுதிவாய்ந்த ஆள்கள் இல்லை.
பல ஆண்டுகளாகவே காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களே, பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தப் பட்டு வருவதும் நடக்கிறது. குறைந்த அளவிலான ஆட்களை வைத்துக் கொண்டு, முழுமையாக பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை, ரயில்வேயில் உருவாகி உள்ளது.
பொது பட்ஜெட்டில் உள்ள ரயில்வே தனி பட்ஜெட்டுக்கு மாற்றப்பட வேண்டும். ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும். எரி பொருள்களை கொண்டு போகும் சரக்கு ரயில்களில் எந்த மாதிரியான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்பதை உறுதிப் படுத்திய பின்னரே ரயிலை இயக்க உத்தரவிட வேண்டும். அதேபோல் இருப்புப் பாதைகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும்
-
சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி!
-
கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளிய கொடூரம்: ஹேமராஜூக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
அஜித்குமார் கொலை வழக்கு: சி.பி.ஐ., விசாரணை தொடக்கம்
-
ஸ்டன்ட் காட்சியில் அஜாக்கிரதையால் ஒருவர் உயிரிழப்பு: இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு
-
தந்தையின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைத்த தனயன்: ராஜ்யசபா எம்.பி., கல்யாணசுந்தரம் அப்செட்
-
அப்பா பேச்சை கேட்காத மகன் என்று யாரும் சொல்லி விடக்கூடாது: அறிவுரை சொல்கிறார் உதயநிதி