காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் சோனியா ஆலோசனை

புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.,க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து நாளை மறுதினம் அக்கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவர் சோனியா ஆலோசனை நடத்த உள்ளார்.

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், வரும் 21ம் தேதி துவங்கி, அடுத்த மாதம் 21ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டத்தொடரின்போது, பஹல்காம் தாக்குதல், ஆப்பரேஷன் சிந்துார் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி கேள்வி எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதவிர, பீஹாரில் சட்டசபை தேர்தலையொட்டி தலைமை தேர்தல் கமிஷனின் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த முகாம் நடவடிக்கை பற்றியும் பார்லிமென்டில் குரலெழுப்ப எதிர்க்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்களின் செயல்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதிக்க அக்கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இதற்காக, அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியாவின் இல்லத்தில் இக்கூட்டம் நாளை மறுதினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

Advertisement