சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா: அஞ்சலி நிகழ்ச்சியில் பரபரப்பு

10

ஸ்ரீநகர்: நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்த வந்த காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, போலீசார் தடுத்ததால் சுவர் ஏறி குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


@1brகடந்த 1931ம் ஆண்டு மகாராஜா ஹரிசிங் ஆட்சிக்கு எதிராக போராடிய 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதை நினைவு கூரும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 13ல் ஜம்மு காஷ்மீரில் அரசியல்வாதிகள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்துவது வழக்கம் . 2019ம் ஆண்டு பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்னர், இந்த தினம் பொது விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.


இந்தாண்டு காஷ்மீரில் குறிப்பிட்ட அந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தலைவர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். முதல்வர் உமர் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் உள்ளார். நேற்று அவர் அஞ்சலி செலுத்த நினைவிடத்துக்குள் செல்ல முயன்ற போது போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.


இந்நிலையில் இன்று (ஜூலை 14) மீண்டும் உமர் அப்துல்லா நினைவிடம் செல்ல முயன்றபோது அவரை உள்ளே செல்ல விடாமல் போலீசார், நுழைவு வாயிலை பூட்டினர். தடுக்கப்பட்டதால் சுவர் ஏறி குதித்து நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.


உமர் அப்துல்லா சுவர் ஏறி குதித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெகு வேகமாக பரவியது. யாரும் எதிர்பாராத வண்ணம், அவர் திடீரென சுவர் ஏறி உள்ளே குதிக்க, அதை தடுக்க முடியாமல் போலீசார் திகைத்து போயினர்.

Advertisement