பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு; உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் நயினார் நாகேந்திரன்

சென்னை: "பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்" என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: திருவாரூர் மாவட்டம் காரியாங்குடி ஊராட்சி தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
பள்ளி மாணவர்களுக்கான காலை உணவை சமைக்க வைத்திருந்த உபகரணங்களை சேதப்படுத்தி, குடிநீர் தொட்டியிலும் மனிதக் கழிவுகளை கொட்டியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்கள், குற்றவாளிகளின் மனதில் மனிதத்தன்மையோ, போலீசார் மீது பயமோ இல்லாததையே காட்டுகிறது.
பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி முதல், பச்சிளம் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் குடிநீர் தொட்டி வரை சமூக விரோதிகளால் மனிதக் கழிவு கலக்கப்படும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், இது குறித்து எப்போது வாய் திறப்பார் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்கள்?
சட்டம் ஒழுங்கைச் சீரழித்து சமூக விரோதிகளின் அழிச்சாட்டியத்தை நிலைநாட்டுவது தான் திராவிட மாடல் ஆட்சியா? தொடக்கப் பள்ளி சிறுவர் சிறுமியரின் உயிரின் மீதும், சமூக நீதியின் மீதும் சிறிதும் அக்கறை இருந்தால், உடனடியாக தீவிர விசாரணை நடத்தி குற்றம் புரிந்த சமூக விரோதிகளைக் கைது செய்ய வேண்டும் என தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இறுதி காலம் நெருங்கி விட்டது!
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவு: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உட்பட 10 பேர் மீது மின்சாரம் தாக்கியதாகவும், தி.மு.க., கொடிக்கம்பம் சரிந்ததில் எடப்பாளையம் அருகே இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்து உள்ளதாகவும் வெளிவந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிட்டால் “சாரி” என்ற வார்த்தையைக் கூறி சமாளித்து விடுவார் நமது முதல்வர் அவர்கள். தி.மு.க.,வின் கொடிக் கம்பங்களாலும், தி.மு.க., தலைவர்களின் கட் அவுட்களாலும் நடக்கும் விபத்துகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது இது ஒன்றும் முதன்முறையல்ல. அறிவாலய அரசின் இந்த அராஜக ஆட்சியின் இறுதி காலம் நெருங்கிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




மேலும்
-
கட்சியில் சேர விரும்பினால் மட்டுமே இணைக்க வேண்டும்! செந்தில் பாலாஜி அட்வைஸ்
-
கல்வித்துறை உதவி எண்கள் செயல்பாட்டில் இல்லை; தலைமையாசிரியர்கள் அதிருப்தி
-
பாறைகள் வெடித்து வீடுகளுக்குள் கல் விழுகிறது: கிராம மக்கள் புகார்
-
'சமோசா, ஜிலேபி உடல் நலத்திற்கு கேடு'; எச்சரிக்கை வாசகம் வைக்கிறது மத்திய அரசு
-
குட்கா பொருட்கள் விற்பனை: செங்கை மாவட்டத்தில் ஜோர்
-
நிறைவு பெற்றது 'அக்ரிஇன்டெக்ஸ்'; மனநிறைவுடன் விவசாயிகள் நன்றி