நிறைவு பெற்றது 'அக்ரிஇன்டெக்ஸ்'; மனநிறைவுடன் விவசாயிகள் நன்றி

கோவை; கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், கொடிசியா சார்பில் நடந்து வந்த, 'அக்ரி இன்டெக்ஸ் 2025' கண்காட்சி, நேற்று நிறைவு பெற்றது.
கண்காட்சி குறித்து விவசாயிகள் கூறியதாவது:
வெள்ளகோவிலை சேர்ந்த விவசாயி கிட்டுசாமி கூறுகையில், ''தென்னந்தோப்புகளில் விழும் மட்டைகளை, துாள் துளாக்கி உரமாக மாற்றும் இயந்திரம் பெரிதும் உதவியாக இருக்கிறது,'' என்றார்.
சின்னத்தாராபுரம், பெரிய திருமங்கலத்தை சேர்ந்த விவசாயி சிவசண்முகம், “எங்கிருந்தாலும் மொபைல் போனில் மோட்டாரை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். தொழில்நுட்பங்களை நேரடியாக பார்வையிட்டு பயன்படுத்த, இந்த கண்காட்சி உதவியாக இருந்தது,” என்றார்.
சேலம் மாவட்டம், டி.பெருமாள்மலையை சேர்ந்த விவசாயி சசிகலா, ”டிராக்டருக்கு தேவையான உதிரி பாகங்களையும், உபகருவிகளையும் அறிந்து வாங்க முடிந்தது,“ என்றார்.
கோவை நரசீபுரத்தை சேர்ந்த விவசாயி ரேவதி, “விவசாயத்தை நீர்ப்பாசனம் முதல் மருந்து தெளித்தல் வரை தானியங்கி முறைக்கு மாற்ற உள்ளோம். அதற்கான தொழில்நுட்பங்கள் குறித்தும் அதற்கான திட்ட செலவுகளை மதிப்பிடவும் கண்காட்சி உதவியது,'' என்றார்.