பாறைகள் வெடித்து வீடுகளுக்குள் கல் விழுகிறது: கிராம மக்கள் புகார்

கோவை; குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கும் போது பாறை வெடித்துச்சிதறி குடியிருப்பினுள் விழுவதும் சாலையில் நடந்து செல்வோரை காயப்படுத்துவதும் தொடர்ந்து வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று. நெ.10 முத்துார் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலை வகித்தார்.
கிணத்துக்கடவு நெ.10 முத்துார்,தலைகீழா பாறை தோட்ட மக்கள் அளித்த மனு:
புல எண் 98ல் பல கல் குவாரிகள் இயங்கி வருகிறது. அதன் அருகே உள்ள வீடுகளுக்குள் குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கும் போது கற்கள் விழுகிறது. இதை தடுக்க வேண்டும்.
சில நேரங்களில் வாகன ஓட்டிகளின் மீதும், பள்ளி செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் மீதும் விழுந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குவாரிகளுக்கு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுக்களில் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
கோரிக்கை மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.