பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரே மூதாதையர் வீட்டை இடிக்கும் வங்கதேசம்: தடுக்க மம்தா கோரிக்கை

50

கோல்கட்டா: வங்கதேசத்தில் உள்ளஇந்தியாவின் பழம்பெரும் இயக்குநரான சத்யஜித்ரேவின் மூதாதையர் வீடு இடிக்க முகமது யூனுஸ் அரசு திட்டமிட்டு உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார். இதில் தலையிட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


மேற்கு வங்கத்தில் பிறந்தவர் சத்யஜித்ரே. இவர் இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 36 படங்களை இயக்கிய இவர் இந்தியாவின் முக்கியமான திரைப்பிரபலமாக கருதப்படுகிறார்.


இவரது தாத்தா உபேந்திர கிஷோர் ராய் சவுத்ரிக்கு( இவரும் பிரபலமான இலக்கியவாதி) சொந்தமான வீடு வங்கதேசத்தின் ஹோரிகிஷோர் ராய் சவுத்ரி சாலையில் உள்ளது. மிகவும் பழமையான இந்த வீடு குழந்தைகள் அகாடமியாக செயல்பட்டு வந்தது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் வீடு பழுதடைந்து காணப்படுகிறது. இதனையடுத்து அந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த கட்டடம் கைவிடப்பட்டு நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. வங்காள கலாசாரத்தின் முக்கியமான தூண்களில் ஒன்றாக ராய் குடும்பம் உள்ளது. வங்காளத்தின் மறுமலர்ச்சியில் உபேந்திர கிஷோர் முக்கியதூணாக உள்ளார். வங்கத்தின் கலாசார வரலாற்றுடன் இந்த கட்டடத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.


இந்த பாரம்பரியம் மிக்க கட்டடத்தை முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பாதுகாக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement