தி.மு.க., கூட்டணியில் 25 'சீட்' திருமாவளவன் அடுத்த 'மூவ்'

தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகள் பெற, விடுதலை சிறுத்தைகள் கட்சி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சிதம்பரத்தில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் முன்னிலையில் பேசிய திருமாவளவன், ''தி.மு.க., வாங்குகிற, 4 ஓட்டுகளில் ஒன்று வி.சி., ஓட்டாக இருக்கும்,'' என, தன் இலக்கை இலைமறை காயாக சுட்டிக்காட்டினார்.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், திருப்போரூர், நாகப்பட்டினம், காட்டுமன்னார் கோவில், செய்யூர், வானுார், அரக்கோணம் ஆகிய, 6 சட்டசபை தொகுதிகளில், வி.சி., போட்டியிட்டு, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
சிறுத்தை ஓட்டு
கடந்த 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், சிதம்பரத்தில் திருமாவளவனும், விழுப்புரத்தில் ரவிக்குமாரும் வெற்றி பெற்றனர். இரண்டு தேர்தல்களிலும் பெற்ற வெற்றியால், வரும் சட்டசபை தேர்தலில், 'சீட்' பெற, அக்கட்சியினரிடம் ஆர்வமும் போட்டியும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளையபெருமாள் நுாற்றாண்டு அரங்கத்தை, சிதம்பரத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
விழாவில் திருமாவளவன் பேசுகையில், ''வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு விழுகிற 4 ஓட்டுகளில், ஒரு ஓட்டு வி.சி., ஓட்டாக இருக்கும்.
''நுாறு ஓட்டுகளில், 25 ஓட்டுகள் சிறுத்தைகள் ஓட்டாக இருக்கும். ஒரு ஓட்டு கூட சிந்தாமல் சிதறாமல், தி.மு.க., கூட்டணிக்கு கொத்துக்கொத்தாக விழும் அளவில் பணியாற்றுவோம். தி.மு.க., ஆட்சி மீண்டும் மலருவதற்கு பாடுபடுவோம்,'' என்றார்.
இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக, வட மாவட்டங்கள் மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களிலும் வி.சி., வளர்ந்துள்ளது.
கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் கட்சி துவக்கப்பட்டுள்ளது. வெளி மாநில சட்டசபை தேர்தலிலும் வி.சி., போட்டியிட்டுள்ளது.
திருமாவளவன் சுற்றுப்பயணத்தின்போது, மாவட்டச்செயலர்கள் மட்டுமல்லாமல், ஒன்றியச் செயலர்களும் 'சீட்' கேட்டு, அவருக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.
கடந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர்களும், 'சிட்டிங்' எம்.எல்.ஏ.,க்களும், வரும் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர்.
அவர்களை தவிர, மாநில, மாவட்ட நிர்வாகிகளும் வாய்ப்பு கேட்பதால், இந்தமுறை தி.மு.க., கூட்டணியில், 25 தொகுதிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் திருமா உள்ளார். அதற்காக, அந்த எண்ணிக்கையையே இலக்காக நிர்ணயித்துள்ளார்.
கணிசமான ஓட்டு
அதை சுட்டிக்காட்டும் வகையிலேயே, சிதம்பரத்தில் நடந்த விழாவில், முதல்வர் முன்னிலையில், 'தி.மு.க., பெறும் நான்கு ஓட்டுகளில் ஒன்று வி.சி., கட்சிக்கு உரியது' என பேசியுள்ளார்.
தமிழகம் முழுதும் கணிசமாக ஓட்டுகளை வைத்திருக்கிற பெரிய கட்சியாக, வி.சி., உள்ளதால், சட்டசபை தேர்தலில், அதிக சீட்டுகளை எதிர்பார்க்கிறோம் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டி உள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -










மேலும்
-
'பத்து தோல்வி பழனிசாமி; மக்கள் உங்களை நம்ப போவதில்லை' என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
ஒரு வழியாக பழுது நீக்கியாச்சு; ஜூலை 23ல் நாடு திரும்புகிறது பிரிட்டீஷ் போர் விமானம்!
-
பவானி ஆற்றில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பரிசல் பயணம்; உயர்மட்ட பாலம் கோரும் அண்ணாமலை
-
ஜார்க்கண்ட் வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப். ரெய்டு: 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
-
மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு வசதிகள் தமிழக சிறை துறைக்கு கோர்ட் உத்தரவு
-
அரசு பள்ளிகளில் 25ல் கூடுகிறது மேலாண்மை குழு