குன்ஹா அறிக்கையில் என்ன உள்ளது? தெரியாது என்கிறார் பரமேஸ்வர்

பெங்களூரு: ''ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் சம்பவத்தில் போலீசாரின் தவறு இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா கமிஷன் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது பற்றி எனக்கு தெரியாது,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

பெங்களூரு சதாசிவ நகரில் அவர் நேற்று அளித்த பேட்டி:

பெங்களூரு ஆர்.சி.பி., அணி பாராட்டு விழாவில் நிகழ்ந்த 11 பேர் பலி சம்பவம் குறித்த அறிக்கை, முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதை நான் இன்னும் பார்க்கவில்லை.

அறிக்கையில் காவல் துறையினரின் தவறு என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. நீதிபதி குன்ஹா, எந்த அர்த்தத்தில் இதை குறிப்பிட்டு உள்ளார் என்பது தெரியவில்லை. அறிக்கையை முழுமையாக பார்த்த பின் தெரியும்.

கடந்த முறை சுர்ஜேவாலா பெங்களூரு வந்தபோது, எம்.எல்.ஏ.,க்களை சந்தித்துப் பேசினார். இம்முறை அமைச்சர்களை சந்திக்க வந்துள்ளார். எதற்கு என்று தெரியவில்லை.

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து எம்.எல்.ஏ.,க்களுடன் விவாதித்ததாக தெரிகிறது. இதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. அவரும் எங்களிடம் கூறவுமில்லை; நாங்களும் கேட்கவில்லை.

துறை முன்னேற்றம் குறித்து அமைச்சர்களிடம் கேட்டுள்ளார். இது அமைச்சர்களின் செயல்பாடு குறித்து மதிப்பீடுவதாக நான் நினைக்கவில்லை.

இது போன்று எஸ்.எம்.கிருஷ்ணா காலத்தில் அமைச்சர்கள் மதிப்பீடு நடந்தது. அப்போது அவர், எங்களுடன் அனைத்தையும் விவாதித்தார். அமைச்சர்களை மதிப்பீடு செய்வதில் பிரச்னை இல்லை.

சிக்கந்துார் பாலம் திறப்புக்கு, முதல்வரை அழைக்காமல் இருந்தது சரியல்ல. விழாவை இரண்டு நாட்கள் ஒத்திவைக்குமாறு முதல்வர் கேட்டும், நிதின் கட்கரி பரிசீலிக்கவில்லை.

கட்கரி மீது எனக்கு மரியாதை உள்ளது. சிறந்த உழைப்பாளி. அவர் முன்னெச்சரிக்கை அமைச்சர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால், ஒரு திட்டத்தின் துவக்க விழாவை, ஓரிரு நாட்கள் ஒத்திவைத்திருக்கலாம்.

எந்த திட்டமாக இருந்தாலும், மாநில அரசின் நம்பிக்கையை மத்திய அரசு பெற வேண்டும். இது தான் கூட்டாட்சி அமைப்பு.

பாலத்துக்கு பெயர் சூட்டப்பட்டதா அல்லது நெறிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பதில் எந்த குழப்பமும் இருக்கக் கூடாது. பாராட்டுவது வேறு விஷயம். ஆனால் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டாமா, இல்லையா?

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement