வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்: காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கேட்டு பிரதமருக்கு ராகுல் கடிதம்

10


புதுடில்லி: வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க சட்ட மசோதா கொண்டு வர வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.


கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது.காஷ்மீரில் நிலைமை மேம்பட்டதும், மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து இருந்தது.


இந்நிலையில், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது: யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீருக்கு முழு மாநில அந்தஸ்து அளிக்கும் வகையில், வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.


பல கூட்டங்களிலும், தனிப்பட்ட முறையிலும், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என அரசு உறுதிபூண்டுள்ளதாக வாக்குறுதி அளித்துள்ளீர்கள். கடந்த 2024ம் ஆண்டு மே 19 ல் புவனேஸ்வரில் அளித்த பேட்டி ஒன்றில், காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது என்ற வாக்குறுதியில் உறுதியாக நிற்கிறோம் என்றீர்கள். 2024 செப்., 19ல் ஸ்ரீநகரில் பேசும்போதும், மாநில அந்தஸ்து வழங்குவது என பார்லிமென்டில் பேசி உள்ளோம் எனக்கூறி உள்ளீர்கள்.
ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்படுவது இதுவே முதல்முறையாகும்.


கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநில அந்தஸ்து வேண்டும் என கேட்டு வருகின்றனர். அது அவர்களது அரசியல்சாசன மற்றும் ஜனநாயக உரிமை. இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement