பஸ் பயணத்தில் பிரசவம்: குழந்தையை வெளியே வீசி கொன்ற தம்பதி கைது

1

மும்பை: புனேயில் பஸ்சில் பயணித்தபோது பிறந்த குழந்தையை வெளியே வீசி கொலை செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த அல்தாப் ஷேக் என்பவரும் அவரது மனைவி ரித்திகா தேரே, 19, என்பவரும் படுக்கை வசதியுள்ள தனியார் பஸ்சில் பயணித்தனர்.
இன்று காலை 6.30 மணியளவில் பத்ரி- சேலு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற ஒருவர், துணியால் சுற்றப்பட்ட ஏதோ ஒன்று பஸ்சில் இருந்து வீசப்படுவதை பார்த்து போலீசிடம் தகவல் அளித்தார். போலீசார், அந்த பஸ்சை நிறுத்தி டிரைவர், கண்டக்டரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:
பஸ்சில் பயணித்தபோது ரித்திகா தேரேவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை வளர்க்க முடியாததால் கைவிட முடிவு செய்து, துணியால் சுற்றி ஜன்னல் வழியாக வீசினோம் என்று உண்மையை ஒப்புக்கொண்டனர்.
இருவரும் கணவன், மனைவி என்று கூறினாலும் அவர்களின் உறவை உறுதிப்படுத்த எந்த ஆவணமும் தர இயலவில்லை. அந்த பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பத்ரி காவல் நிலையத்தில் தம்பதியர் மீது 94(3) மற்றும் 94(5) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement