காசாவில் உதவிப் பொருட்கள் வழங்கும் இடத்தில் வன்முறை: 20 பேர் உயிரிழப்பு

4

காசா: காசாவில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்தனர்.


கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே போர் நீடித்து வருகிறது.


கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் தற்காலிக போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும் இரு தரப்பினரும் அடிக்கடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.


காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இந்த அறக்கட்டளையின் மூலம் தினமும் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

அப்படி உணவு பொருட்களை பெறும் போது, சிலர் ஆத்திரத்தில் இஸ்ரேல் படையினரை தாக்குகின்றனர். இதனால், தற்காப்புக்காக ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 875 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா., மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில், பாலஸ்தீனத்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கான் யூனிஸில் நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் இடத்தில் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து காசா மனிதநேய அறக்கட்டளை கூறுகையில், "நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் தூண்டிவிட்ட வன்முறையால் 19 பேர் கூட்டத்தில் மிதித்து கொல்லப்பட்டனர். ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களே இந்த சம்பவத்திற்கு காரணம். திட்டமிட்டே அமைதியை சீர்குலைக்கின்றனர்," எனக் கூறியுள்ளது.

Advertisement