அடுத்த முதல்வர் குமாரசாமி நிகில் கருத்துக்கு பா.ஜ., எதிர்ப்பு

சிக்கபல்லாபூர் : “அடுத்த முதல்வர் குமாரசாமி,” என்ற நிகில் கருத்துக்கு, சிக்கபல்லாபூர் பா.ஜ., தலைவர் சீகல் ராமசந்திர கவுடா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ம.ஜ.த., கட்சியை வலுப்படுத்த அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி, மாநிலம் முழுதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

கடந்த 11ம் தேதி சிக்கபல்லாபூரில் நடந்த கட்சி கூட்டத்தில் அவர் பேசுகையில், “நாட்டிற்கு பிரதமர் மோடி, கர்நாடகாவுக்கு குமாரசாமி,” என்று கூறினார்.

அதாவது பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் குமாரசாமி அடுத்த முதல்வர் என்பது போல் கருத்துத் தெரிவித்தார். இதற்கு பா.ஜ., எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிக்கபல்லாபூர் மாவட்ட பா.ஜ., தலைவர் சீகல் ராமசந்திர கவுடா நேற்று அளித்த பேட்டி:

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் குமாரசாமி அடுத்த முதல்வர் என்று நிகில் கூறி இருப்பது, ம.ஜ.த., கட்சியின் கருத்து. கூட்டணியின் கருத்து இல்லை.

சட்டசபை தேர்தலுக்கு பின் கூட்டணி வேட்பாளர் யார் என்பதை, மேலிட தலைவர்கள் முடிவு செய்வர்.

ம.ஜ.த., தொண்டர்களை ஊக்கப்படுத்த குமாரசாமி முதல்வர் ஆவார் என்று நிகில் கூறினால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

சித்லகட்டா முன்னாள் எம்.எல்.ஏ., ராஜண்ணாவுக்கும், எனக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை.

கட்சியில் என்னுடைய மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு பதவி வாங்கிக் கொடுப்பது தொடர்பாக சில சிறிய சண்டைகள் உள்ளன. ஆனால் கட்சி அமைப்பு என்று எங்கள் இருவருக்கும் முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement