புதிதாக ஐந்து மாநகராட்சிகள்: துணை முதல்வர் சிவகுமார் திட்டம்

பெங்களூரு : ''கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் புதியதாக ஐந்து மாநகராட்சிகள் உருவாக்கப்படும்,'' என, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.

வாக்குறுதி அமலாக்க திட்டக்குழுவின் மாநில, மாவட்ட, தாலுகா அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நேற்று பெங்களூரு குயின்ஸ் ரோடு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேசியதாவது:

ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் பெங்களூரு ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்படும். இதன் தேர்தல் நடக்கும். சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை பா.ஜ., எதிர்க்கலாம். இதை நிர்வாக கண்ணோட்டத்தில் கையாள வேண்டும். சிவகுமார் மட்டும் தனியாக ஒரு அரசை உருவாக்க முடியாது.

அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டும் உருவாக்க முடியும். காங்கிரஸ் அரசு, ஏழை மக்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை செய்துள்ளது.

50 ஆயிரம் கோடி ரூபாய் வாக்குறுதி திட்டங்களுக்காகவும்; 19 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்; 11 ஆயிரம் கோடி ரூபாய் பென்ஷன் தொகையாகவும் டிபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

மாநில அரசின் பட்ஜெட்டில் 25 சதவீத தொகை மக்களுக்காக செலவிடப்பட்டு உள்ளது.

இதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்வது அவர்களின் கடமை.

காங்கிரஸ் வழங்கிய பல திட்டங்களை யாராலும் தடுக்க முடியாது. உணர்ச்சிகளை மையமாக கொண்டு பா.ஜ.,வும்; மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு காங்கிரசும் அரசியல் செய்கிறது. ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு நன்றி கூற வேண்டும்.

அவர் தான் வாக்குறுதி திட்ட அமலாக்க குழுக்கள் அமைக்க அறிவுறுத்தினார். இக்குழுவில் உள்ள பலரும் நல்ல முறையில் செயல்படுகின்றனர். இதை பார்த்து எதிர்க்கட்சியினர் நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.

பெங்களூரில் உள்ள சொத்துகளின் உரிமையாளர்களுக்கு, அவர்களின் வீட்டின் வாசலுக்கு வந்து இ - பட்டா தரப்படுகிறது. இதனால், அனைவரும் பயனடைகின்றனர். தங்கள் சொத்துகள் யார் பெயரில் உள்ளது என்பதே பலருக்கும் தெரியவில்லை. இது போன்ற பிரச்னைகள் சரிசெய்யப்பட்டு, ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement