சிரியா ராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு; தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்

5

டமாஸ்கஸ்: துரூஸ் இன மக்களுக்கு ஆதரவாக சிரியாவில் தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், அந்நாட்டின் ராணுவ தலைமையகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவி வருகிறது.


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஷர் அல் ஆசாத்தின் ஆட்சி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அல் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றார். அதன்பிறகு, ஹயத் தஹிர் அல் ஷியாம் சிரியாவின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை விரும்பாத முன்னாள் அதிபர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடேயே, சிரியா அரசு படைகள், அரசு ஆதரவு குழுக்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு பயங்கரவாதிகள், துரூஸ் இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வேய்தா மாகாணத்தில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த முயன்று வருகின்றனர்.


அதேவேளையில், துரூஸ் இன மக்கள் இஸ்ரேல் நாட்டு அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளனர். எனவே, துரூஸ் இன மக்களை பாதுகாக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.


துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக, ஸ்வேய்தா மாகாணத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல், குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.


சிரியாவின் தகவல் அமைச்சர் ஹம்சா அல்-முஸ்தபா கூறுகையில், "ஸ்வேய்தா மாகாணத்தில் நடைபெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் ஒரு வெற்றி அல்ல. மாறாக இஸ்ரேல் அரசாங்கம் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. ஸ்வேய்தா மாகாண மக்கள் இந்த நாட்டின் ஒரு தூண்களாவர். அவர்களும் எங்களின் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்," என்று கூறினார்.


இஸ்ரேல் சிரியாவில் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த 4 நாட்களில் மட்டும் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement