புதுச்சேரி மாநில தனியார் டூரிஸ்ட் பஸ் பறிமுதல்

1

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுாரில் விதிமுறை மீறி வாடகைக்கு இயக்க முயன்ற புதுச்சேரி மாநில தனியார் டூரிஸ்ட் பஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநில தனியார் டூரிஸ்ட் பஸ்கள், விழுப்புரம் மாவட்டத்தில் ஆட்களை ஏற்றி வாடகைக்கு இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்படி, விதிமுறை மீறி விழுப்புரம் மாவட்டத்தில் இயக்கப்படும் புதுச்சேரி டூரிஸ்ட் பஸ்களை, விழுப்புரம் மாவட்ட தனியார் பஸ், டூரிஸ்ட் வேன் உரிமையாளர்கள் பிடித்து ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைத்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு திருவெண்ணைநல்லுார் பகுதியில் வாடகைக்கு இயக்க முயன்ற புதுச்சேரி மாநில டூரிஸ்ட் பஸ்சை, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் பிடித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ.,விடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர், ஆவணங்களை ஆய்வு செய்தபோது அனுமதியின்றி இயக்கியது தெரியவந்தது.

இதையடுத்து, பஸ்சை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து அபராதம் விதிக்க, ஆர்.டி.ஓ.,விற்கு பரிந்துரை செய்துள்ளார்.

Advertisement