பயத்தில் தான் பா.ஜ.,வுடன் கூட்டணி: அ.தி.மு.க., பழனிசாமி மீது பொன்முடி தாக்கு

விழுப்புரம்: அ.தி.மு.க., பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறிவிட்டு, தற்போது பயத்தில் சேர்ந்துள்ளார் என, பொன்முடி எம்.எல்.ஏ., கூறினார்.
விழுப்புரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாநிதி ஆட்சியில், கடந்த 2010-2011ம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலையில் இருந்து முதுகலை மையம் என தனியாக விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் துவங்கப்பட்டது. பின், அண்ணாமலை பல்கலையோடு இணைக்கப்பட்டு, இந்த மையம் செயல்பட்டது. இந்த மையத்தில் மாணவர் சேர்க்கை துவங்கிய போது, 4 பட்ட மேற்படிப்புகள் மட்டுமே இருந்தது.
தொடர்ந்து, இடம் மாற்றப்பட்டு, அண்ணாமலை பல்கலையில் வந்தபோது, மாணவர்கள் இங்கேயே தேர்வெழுதும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டது.
இந்தாண்டு விண்ணப்பங்கள் பெறவில்லை என கடந்த ஒருவாரம் முன், இங்குள்ள ஆசிரியர்கள் என்னிடம் தகவல் தெரிவித்தனர். நான், உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழக முதல்வரிடம் கூறியதன் பேரில், இந்த மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மையத்தில் 7 பட்ட மேற்படிப்புகள் உள்ளன. விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மற்றும் இந்த மையம் ஆகிய இரு இடங்களில் மட்டுமே மாவட்டத்தில் முதுகலை பட்ட மேற்படிப்பு மையம் உள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த பின், 4 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட அரசு கல்லுாரிகளை துவக்கியுள்ளார். உயர்கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் தமிழகம் தான் முதன்மையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
பா.ம.க.,வில் தந்தை, மகன் பிரச்னையை தீர்த்து கொண்டு வந்தவுடன், தி.மு.க., திட்டத்தை பற்றி அன்புமணி விமர்சிக்கலாம்.
அ.தி.மு.க., பழனிசாமி, முதலில் பா.ஜ.,வோடு சேர மாட்டேன் என கூறி விட்டு தற்போது சேர்ந்துள்ளார். அவர் சொந்த பயத்தில் தான் பா.ஜ.,வோடு சேர்ந்துள்ளார். தி.மு.க.,விற்கு அது போன்ற பயமில்லை.
மகளிர் உரிமை தொகை தி.மு.க.,வில் இருந்து வழங்குகிறார்களா என பழனிசாமி கூறுகிறார். அ.தி.மு.க.,வில் பல திட்டங்களை கட்சியில் இருந்தா செய்தார்கள். அரசு திட்டங்களை அரசு நிதியில் இருந்து தான் செய்வர்.
பல்கலைக்கழகம் அறிவித்தார்களே தவிர அ.தி.மு.க., ஆட்சியில் நிதியை ஒதுக்க முடியவில்லை. தற்போது வளர்ச்சி பெற்றதால் அண்ணாமலை பல்கலையோடு இணைத்து செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். கல்லுாரிகள் வளர, வளர பல்கலைக்கழகம் தேவைப்படுவதால் அதற்கான முயற்சிகள் செய்யப்படுகிறது. ஆட்சிக்கே வராமல் அ.தி.மு.க., பழனிசாமி வெறும் அறிவிப்பை வெளியிடுகிறார். நிரந்தர முதல்வராக தமிழகத்தில் ஸ்டாலின் தான் இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.









