உலக வாலிபால்: இந்தியா வரலாறு * உஸ்பெகிஸ்தானை வீழ்த்தி தகுதி

ரட்சபுரி: உலக வாலிபால் சாம்பியன்ஷிப்பில் (17 வயது) பங்கேற்க இந்திய அணி தகுதி பெற்றது.
சர்வதேச வாலிபால் கூட்டமைப்பு சார்பில் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இதன் இரண்டாவது சீசன் 2026ல் பல்கேரியாவின் சோபியா நகரில் நடக்க உள்ளன.
இதனிடையே, தாய்லாந்தில் ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் (16 வயது) நடக்கிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் (தாய்லாந்து, ஆஸ்திரேலியா, சீனா) வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இதில் நேற்று உலக வாலிபால் சாம்பியன்ஷிப் முதல் சீசனில் பைனலுக்கு முன்னேறிய வலிமையான உஸ்பெகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதல் இரு செட்டை இந்தியா 25-21, 25-16 என கைப்பற்றியது. அடுத்த இரு செட்டுகளை உஸ்பெகிஸ்தான் 25-19, 25-18 என வென்று பதிலடி தந்தது. கடைசி, 5வது செட்டில் இந்திய அணி 15-13 என அசத்தியது.
முடிவில் இந்திய அணி 3-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. தவிர, முதன் முறையாக உலக வாலிபால் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தகுதிபெற்று வரலாறு படைத்தது.
தற்போது இந்திய அணி 'இ' பிரிவில் 6 புள்ளியுடன் 2வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் ஜப்பானை வீழ்த்தினால், அரையிறுதிக்கு முன்னேறலாம்.

Advertisement