காணாமல் போன தொழிலாளி வழக்கு: ஏழு ஆண்டுகளுக்கு பின் கொலை வழக்காக மாற்றம்

தேனி: போடி கூலித்தொழிலாளி ரமேஷ் 41, காணாமல் போன வழக்கு 7 ஆண்டுகளுக்குப் பின் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்ய எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவிட்ட நிலையில், கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போடி குப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோயில் தெரு ரமேஷ் 41, கூலித்தொழிலாளி. இவர் 2018 பிப்.,ல் காணாமல் போனார். இவரது மனைவி மேகலா போடி நகர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு ஏப்ரலில் பதிவு செய்து தேடினர்.

அதே சமயம் வீரபாண்டி அருகே ஒரு அழுகிய நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டு வி.ஏ.ஓ., புகாரில் போலீசார் விசாரித்தனர். இரு வழக்குகளை தனித்தனியாக போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் 2024 ஜூனில் ரமேஷ் காணாமல் போன வழக்கில் போடியை சேர்ந்த பாண்டி என்பவருக்கு தொடர்பு இருப்பதை போலீசார், உறுதி செய்தனர்.

அவரிடம் நடந்த விசாரணையில் சொத்து தகராறில் 5 பேருடன் இணைந்து ரமேஷை கொலை செய்து, தப்புக்குண்டு அருகே கிணற்றில் வீசியதாக கூறினார். அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர். ரமேஷ் உடல் உறுப்புகள் மதுரை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திலும், மண்டை ஓடு சென்னை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

உடல் ரமேஷ் உடையதுதான் என கிடைத்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் எஸ்.பி., சிவபிரசாத் உத்தரவில் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்திருந்த அடையாளம் தெரியாத உடல் கண்டறிந்த வழக்கினை, கொலை வழக்காக மாற்றம் செய்து பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில், 'கைது செய்யப்படுவர்.' என, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

Advertisement