இக்கட்டான நிலையில் இந்திய கால்பந்து * சுனில் செத்ரி வேதனை

புதுடில்லி: ''இந்திய கால்பந்தில் தற்போது இக்கட்டான நிலை நிலவுகிறது. விரைவில் இது சரியாகும் என நம்புகிறேன்,'' என சுனில் செத்ரி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் (ஏ.ஐ.எப்.எப்.,), கடந்த 2013ல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் துவங்கப்பட்டது. இத்தொடரை நடத்த கடந்த 2010ல் கால்பந்து விளையாட்டு மேம்பாட்டு நிறுவனத்துடன் (எப்.எஸ்.டி.எல்.,), 15 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது வரும் டிச. 2025ல் முடிகிறது.
ஆனால் ஏ.ஐ.எப்.எப்., மற்றும் எப்.எஸ்.டி.எல்., என இரு தரப்பிலான புதிய ஒப்பந்தம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப் படவில்லை. இதனால் 12வது சீசன் (2025-26) நிறுத்தி வைக்கப்படுவதாக, எப்.எஸ்.டி.எல்., அறிவித்தது. இது எப்போது துவங்கும் என எவ்வித தெளிவான திட்டமிடலும் இல்லாமல், குழப்பமான சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து இந்திய கால்பந்து அணி, ஐ.எஸ்.எல்., தொடரில் பங்கேற்கும் பெங்களூரு அணி கேப்டன் சுனில் செத்ரி கூறியது:
கடந்த சில வாரத்துக்கு முன் எனக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அதில்,' ஐ.எஸ்.எல்., தொடர் துவங்க, குறைந்தது இரு வாரங்கள் தாமதம் ஆகலாம்,' என்றனர். உண்மையில் இது, எனக்கு சற்று மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் அப்போது விடுமுறையில் இருந்தேன். இதனால் உடற்தகுதியை மீட்டெடுக்க அதிக நேரம் கிடைத்தது.
ஆனால் 15 நாள் தாமதம் என்பது, இப்போது காலவரையின்றி என ஆகிவிட்டது. எனது முகத்தில் மகிழ்ச்சி தொலைந்து விட்டது. மீதமுள்ள நாட்களை எப்படிச் செலவிடுவது என்ற கவலை தொற்றிக் கொண்டுவிட்டது. மற்ற அணிகளின் வீரர்களுடன் பேசிய போது, அவர்களின் நிலையை கேட்ட போது, எனது சுயநலம் முக்கியமல்ல என்பதை உணர்ந்தேன்.
நிச்சயமற்ற எதிர்காலம்
இந்திய கால்பந்தில் தற்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை மிகவும் கவலை தருகிறது. வீரர்கள், பணியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் பயிற்சியாளர்கள் என, எனது அணியில் மட்டுமன்றி, பல்வேறு அணிகள் தரப்பில் இருந்தும் செய்திகள் எனக்கு வருகின்றன. இந்திய கால்பந்தின் தற்போதுள்ள சூழலில், நாம் சந்திக்கும் நிச்சயமற்ற நிலை குறித்து அனைவரும் கவலைப்படுகின்றனர், பயப்படுகின்றனர்,
கால்பந்து போட்டிகள் மீது ஆர்வம் கொண்ட அனைவரும், ஐ.எஸ்.எல்., தொடரை மீண்டும் துவங்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என எனக்குத் தெரியும். விரைவில் இதற்கு உறுதியான தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இது எப்படி சாத்தியம் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், இத்தொடரை சார்ந்த வாழ்வாதாரம் கொண்ட வீரர்கள், மருத்துவ குழுக்கள், கிட்மேன், தயாரிப்பு நிறுவனத்தினர் என அனைவரும் சற்று அமைதியாக இருங்கள். எல்லோரும் ஒருங்கிணைந்து இந்த புயலில் பயணம் செய்வோம். இப்போதைக்கு ஒருவருக்கு ஒருவர் உதவுங்கள், பயிற்சிகளை தொடருங்கள், கால்பந்து விரைவில் துவங்க வேண்டும். இது நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement