சி.சி.டி.வி., கேமராக்கள் சேதம் இரவில் வாகன ஓட்டிகள் அச்சம்

விருதுநகர்: விருதுநகர் - மதுரை செல்லும் ரோட்டில் சி.சி.டி.வி., கேமராக்கள் சேதமாகி இருப்பதால் இரவில் வாகன விபத்து ஏற்பட்டாலும் அதில் ஈடுபட்டவர்களை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகரில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் வாகன விபத்துக்கள், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிப்பதற்காக மேல்நிலைப்பள்ளி அருகே சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டது.

இந்த கேமராக்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது வயர்கள் துண்டாகி சேதமான நிலையில் உள்ளது. கள்ளிக்குடி, லட்சுமி நகர், சத்திரரெட்டியபட்டி, ஆவல்சூரன்பட்டி, என்.ஜி.ஓ., காலனி உட்பட விருதுநகரை சுற்றிய பகுதிகளில் இருந்து தினமும் பணிக்காகவும், மருத்துவ தேவை, படிப்பிற்காகவும் பலரும் பஸ்கள், ஆட்டோ, டூவீலரில் வந்து செல்கின்றனர்.

இதனால் மதுரை ரோடு காலை முதல் இரவு வரை போக்குவரத்து நிறைந்து காணப்படும். இதில் வாகன சோதனை, கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக போலீசார் மதுரை ரோட்டில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் சோதனைச் சாவடி அமைத்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மதுரை ரோட்டில் இரவில் இளைஞர்கள் சிலர் டூவீலரில் சாகசத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவியாக இருந்த சி.சி.டி.வி., கேமராக்கள் சேதமாகி இருப்பதால் அவர்களை அடையாளம் காண முடிவதில்லை. இதனால் சக வாகன ஓட்டிகள் அச்சத்தில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே விருதுநகர் - மதுரை ரோட்டில் பள்ளிக்கு அருகே சேதமாகியுள்ள சி.சி.டி.வி., கேமராக்களை செயல்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement