மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

4


மதுரை: மதுரை மாநகராட்சி வரிவிதிப்பில் ரூ. 200 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக, அரசு தரப்பில் ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாநகராட்சியில், 2023, 2024ல் ஏராளமான தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்து வரி நிர்ணயித்து, பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. சைபர் கிரைம் போலீசார் அறிக்கை அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்; 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதில் மண்டல தலைவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, மண்டல தலைவர்கள் 5 பேரும், நிலைக்குழு தலைவர்கள் இருவரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மாநகராட்சியில் இதுவரை 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

முறைகேடு தொடர்பாக, மாநகராட்சி அலுவலர், கவுன்சிலர்கள், ஆளுங்கட்சியினர் என 55 பேர் பட்டியலை, போலீசார் தயாரித்து, விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ. 200 கோடி மதிப்புக்கு மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.


இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரி, ஐகோர்ட் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று விசாரித்த ஐகோர்ட் கிளை, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை மதுரை தென்மண்டல போலீஸ் ஐ.ஜி., மதுரை போலீஸ் கமிஷனர் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


''அரசு தரப்பில், ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement