போலீசார் தாக்கியதில் மாணவன் உடல் நலம் பாதிப்பு; நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு

3

தஞ்சாவூர் : தஞ்சாவூரில், போலீஸ் தாக்கியதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கல்லுாரி மாணவன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவனின் தந்தை, நீதிமன்றத்தின் மனு கொடுத்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே, உம்மளாப்பாடியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மகன் மதன், 17. நாமக்கலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் படிக்கிறார். இவர், கடந்த 13ம் தேதி, சொந்த ஊருக்கு வந்திருந்தார். அன்று காலையில், அதே ஊரில் நடந்த கோவில் கும்பாபிஷேகத்துக்கு, கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லுாரியில், முதலாம் ஆண்டு படிக்கும் நண்பருடன், மதன் பைக்கில் சென்றார்.


பைக்கில் வேகமாகச் சென்றதாக கூறி இருவரையும் பிடித்த கபிஸ்தலம் போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த மதன், நேற்று, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


மதன் தந்தை கோவிந்தராஜ், மகனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிபதியுடம் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து, மதன் கூறியதாவது:



என்னை கம்பால் முகம் மற்றும் நெஞ்சில் போலீசார் தாக்கினர். என் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது. ஆனாலும், போலீசார், குடிக்க தண்ணீர் கொடுத்து மீண்டும் தாக்கினர். நள்ளிரவு வரை தாக்கிய போலீசார், பைக்கை பறித்து வைத்துக் கொண்டனர்.


நேற்று முன்தினம் திடீரென ரத்த வாந்தி எடுத்து, மயக்கமடைந்தேன். பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, போலீசாரின் பேச்சை கேட்டு, அங்கு இருந்த டாக்டர்கள், எனக்கு சிகிச்சை அளிக்க மறுத்தனர்.



என் தந்தை போலீஸ் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதும், சிகிச்சை அளிக்க முன் வந்தனர். தற்போது, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement