வீடுகளில் பாம்பு புகுந்தால் பிடிக்க 'நாகம்' செயலி அறிமுகம்

5


சென்னை: வீடுகளில் பாம்பு புகுந்தால், அதை பிடிப்பதற்கு வசதியாக, 'நாகம்' செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


உலக பாம்பு தினத்தையொட்டி, தமிழக வனத்துறை சார்பில் பாம்பு பிடி வீரர்களுக்கு, இரண்டு நாள் தொழில்நுட்ப செயல்திறன் பயிற்சி பயிலரங்கம், சென்னை கிண்டியில் உள்ள குழந்தைகள் பூங்காவில் நேற்று துவங்கியது. நிகழ்ச்சியில், பாம்பு பிடி வீரர்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வசதியாக, நாகம் செயலியை, வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு வெளியிட்டு, பாம்பு பிடி வீரர்களுக்கான உபகரணங்களை வழங்கினார். மேலும், தமிழகத்தில் 'பரவலாக காணப்படும் பாம்புகள்' என்ற புத்தகம் மற்றும் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டன.


நிகழ்ச்சியில் சுப்ரியா சாஹு பேசியதாவது: இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் பாம்புகளை வழிபடும் வழக்கம் உள்ளது. இயற்கை வனங்களில் பாம்புகளுக்கு முக்கிய இடம் உள்ளது. நகர்ப்புறங்களில் பாம்பு குறித்த பயம் மற்றும் தவறான புரிதல் தற்போதும் நிலவுகிறது. ஆனால், கிராமங்களில் அவ்வாறு இல்லை.


தற்போது பாம்பு கடி என்பது, அறிவிக்கப்பட வேண்டிய நோய்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல், மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுவோர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.


இருளர் சமூகத்தினர் இந்த பணியை சிறப்பாக செய்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பாம்பு மீட்பு மற்றும் விழிப்புணர்வில் தங்கள் வாழ்வை அர்ப்பணித்து, பத்ம ஸ்ரீ விருது பெற்று பெருமை சேர்த்து உள்ளனர்.



அறிவியல் முறைப்படி, ஆக்கப்பூர்வமான வழியில் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும். அறிவியலற்ற முறையில், பாம்புகளை பிடிப்பதை நிறுத்த வேண்டும். நாகம் செயலியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஏனெனில், பயிற்சி பெற்றவரால் மட்டுமே, பாதுகாப்பான முறையில் பாம்புகளை மீட்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில், தலைமை வனப்பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநர் ரிட்டோ சிரியாக் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


@block_P@

செயலியில் என்ன இருக்கு?

பொதுமக்கள் பாம்புகளை பார்த்தவுடன் புகார் அளிக்கவும், உரிய நேரத்தில் மீட்பு நடவடிக்கையை உறுதி செய்யவும், நாகம் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் புகார் அளித்தால், உடனடியாக பயிற்சி பெற்ற மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அறிவியல் முறையில் பாம்புகளை பிடித்து, அதற்கான வாழ்விடத்தில் விடுவர்.


இச்செயலியில் பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்கள் பெயர், மொபைல் எண், பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி நடவடிக்கை, ஆண்டுவாரியாக பாதிக்கப்பட்டோர் விபரம் போன்ற தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இச்செயலி ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். block_P

Advertisement