அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 1,563 பேர்: வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

1

புதுடில்லி: அமெரிக்கா அதிபராக 2வது முறை டிரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து, இந்தியர்கள் 1,563 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2வது முறை அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் தேதி பொறுப்பேற்றார். அப்போதிலிருந்து இதுவரை இந்தியர்கள் 1,563 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடுகடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள், வணிக விமானங்களில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

வெளியுறவு அமைச்சக அறிக்கையின் படி,

டிரம்ப் அதிபராக முதல் முறை பதவி ஏற்ற காலத்தில் 2017 முதல் 2021 வரை அமெரிக்கா, இந்தியர்கள் 6,135 பேரை நாடு கடத்தியிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான நாடுகடத்தல்கள் நடந்தன, அப்போது 2,042 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர். மற்ற ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 2017 இல் 1,024 ஆகவும், 2018 இல் 1,180 ஆகவும், 2020 இல் 1,889 ஆகவும் இருந்தது.

இதற்கு நேர்மாறாக, ஜோ பைடன் அதிபராக இருந்தபோது, நாடுகடத்தப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 3,000 ஆகக் குறைந்தது.

டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கையைத் தொடங்கியதால் அதிகம் பேர் நாடு கடத்தப்பட்டனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement