நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்

டமாஸ்கஸ்: 'நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை' என ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் அகமது அல்-ஷாரா பதில் அளித்துள்ளார்.
மேற்கு ஆசிய நாடான சிரியாவில், ஸ்வீடா மாகாணத்தில் ட்ரூஸ் சிறுபான்மையினர் அதிகம் வசித்து வருகின்றனர். அவர்கள் மீது, சிரிய அரசுக்கு ஆதரவான இஸ்லாமிய குழுவினர் சில நாட்களாக தாக்குதல் நடத்தினர். இதில் 200க்கும் மேற்பட்ட சிறுபான்மை ட்ரூஸ் மக்கள் கொல்லப்பட்டனர்.
குறிப்பிட்ட இந்த பிரிவு சிறுபான்மையினர், இஸ்ரேல், லெபனான் நாடுகளிலும் வசிக்கின்றனர். இதனால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அறிந்த இஸ்ரேல் ராணுவம், நேற்று சிரியா அரசுப்படைகள் மீது தாக்குதல் நடத்தியது. டமாஸ்கஸ் நகரில் இருக்கும் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை விளைவித்தது.
இதை தொடர்ந்து, துருக்கி, அமெரிக்கா மேற்கொண்ட சமரச முயற்சியின் காரணமாக, சிரிய அரசுப்படைகள், ட்ரூஸ் சிறுபான்மை பகுதியில் தாக்குதலை நிறுத்தின. இஸ்ரேல் ராணுவமும் தாக்குதலை நிறுத்தியது.
இந்நிலையில், சிரியா அதிபர் அகமது அல்-ஷாரா கூறியதாவது: நாங்கள் போருக்கு அஞ்சுவதில்லை. சவால்களை எதிர்கொண்டு எங்கள் மக்களைப் பாதுகாப்பதில் எங்கள் வாழ்க்கையை செலவிட்டுள்ளோம். சிரியா மக்களின் கண்ணியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் போராடத் தயாராக இருக்கிறோம். பொதுமக்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement