வெளிநாட்டு தபால் பார்சலில் கடத்தல்: ரூ.48 லட்சம் இ-சிகரெட் பறிமுதல்

1

சென்னை: மலேசியா மற்றும் துபாயிலிருந்து வெளிநாட்டு தபால் அலுவலகம் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் மதிப்புள்ள இ-சிகரெட்டுகளை சென்னை விமான சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.


பிற நாடுகளில் இருந்து தபால் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், சென்னை விமான நிலையத்தில் செயல்படும் வெளிநாட்டு தபால் நிலையத்தால் கையாளப்படுவது வழக்கம்.

அவ்வாறு மலேசியாவில் இருந்து சென்னை வெளிநாட்டு தபால் நிலையம் வந்த மூன்று பார்சல்களை சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில், ஜவுளிப்பொருள்கள் என்ற பெயரில் அனுப்பி வைக்கப்பட்ட பார்சல்களில், 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தவறான தகவல் அளித்து, இ-சிகரெட் கடத்தி வந்ததை கண்டறிந்த சுங்கத்துறையினர், அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, துபாயில் இருந்து வந்த பார்சல்களை சோதனையிட்டபோது, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த சிகரெட் பார்சல்களை அனுப்பியது யார், யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது, வெளிநாட்டு தபால் அலுவலகத்தில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement