இடைத்தரகர் இன்றி விவசாய திட்டங்கள்: இ.பி.எஸ்., வாக்குறுதி

6

சிதம்பரம்: ''அ.தி.மு.க., அரசு அமைந்ததும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நல திட்டங்களையும் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம்'' என, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார்.


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அதில் விவசாயிகள் பேசுகையில், 'கடந்த நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில், பயிர் காப்பீட்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப் படவில்லை.

பொருளாதார வளர்ச்சியில் விவசாயிகள் 30 ஆண்டு பின்தங்கி இருக்கிறோம். நீர் மேலாண்மை செயல்படுத்தப்படவில்லை. சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் ஆலை துவக்கப்படும் என தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் அறிவிக்கப்பட்டது. இன்று வரை பூமிபூஜை கூட போடப்படவில்லை'என குறைகளை கூறினர்.



அதை தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியதாவது: கடலுார்- மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு இடையே, கொள்ளிடத்தில் ஆதனூர் - குமாரமங்கலம் இடையே அ.தி.மு.க., ஆட்சியில் ரூ. 400 கோடியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இதுவரை, தி.மு.க., அரசு அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை.


அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமைந்ததும், நீர் மேலாண்மைக்கு தனி துறை உருவாக்கப்படும். என்.எல்.சி., பங்குகள் தனியாருக்கு விற்கும்போது ,முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் அந்த பங்குகளை தமிழக அரசு மூலம் வாங்கி என்.எல்.சி., ஊழியர்களை காப்பாற்றினார்.


விவசாயிகள் வேளாண் துறையை பற்றி அவ்வளவு குறை கூறுகிறார்கள். தற்போதுள்ள வேளாண் துறை அமைச்சர், அமைச்சராக இருப்பதற்கு தகுதியற்றவர். சொந்த ஊரில் கூட அவரால் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை செய்ய முடியவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் உழவன் செயலி மூலம் ஆன்லைனில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.


தற்போது உழவன் செயலி முறையாக செயல்படுத்தவில்லை. காவிரி நதி நீர், கடலுார் மாவட்டம் வரை வந்து கடலில் கலக்கிறது அந்த நதிநீர் மாசடைய கூடாது என்பதற்காக. நான் முதல்வராக இருந்தபோது விரிவான ஒரு திட்டத்தை தயார் செய்து பிரதமரிடம் வழங்கினேன்.
அதனை ஏற்று, தற்போது மத்திய அரசு நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை உருவாக்கி மாநில அரசுக்கு ரூ. 11 ஆயிரத்து 500 கோடி வழங்கியுள்ளது. ஆனால், இதனை தர மாட்டார்கள் என சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் கிண்டல் செய்தார்.



சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1020 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலைய பூங்கா ஆயிரம் ஏக்கரில் அமைத்தேன் இதுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா. அதன் பிறகு எதையுமே தி.மு.க., அரசு செய்யவில்லை.


அ.தி.மு.க., அரசு அமைந்த உடன் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து நல திட்டங்களையும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக செயல்படுத்துவோம். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

தி.மு.க., கூட்டணி கட்சிகளை வரவேற்கும் பழனிசாமி!

சிதம்பரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: தி.மு.க.,வினர் ஆட்சி, அதிகாரம் வேண்டும் என்றால் யார் காலில் வேண்டுமானாலும் விழுவர். மத்திய அரசில் 16ஆண்டுகள் தி.மு.க., அங்கம் வகித்தது. பல்வேறு பிரதமர்களின் அமைச்சரவையில் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தபோது தமிழகத்திற்கு திட்டங்கள் கொண்டு வரவில்லை.




தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின் 7,737 கொலைகள் நடந்துள்ளன. கடந்த 6 மாதத்தில் 730 கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன. வென்டிலேட்டரில் இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. 2026 தேர்தல் வாயிலாக, மக்கள் வென்டிலேட்டரை எடுத்து, தி.மு.க., ஆட்சியின் மூச்சை நிறுத்திவிடுவர்.



சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. மணல் கொள்ளையை தட்டிக் கேட்டவரை, மணல் மாபியா கும்பல் வெட்டிக் கொலை செய்தது. அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். அப்போது வேடிக்கை பார்த்த கலெக்டர், எஸ்.பி., - ஆர்.டி.ஓ., தாசில்தார் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவோம்.

கூட்டணி கட்சி தலைவர்கள், தி.மு.க., ஆட்சியை அற்புதமான ஆட்சி என்கின்றனர். சீட்டை குறைத்து விடுவர் என பயத்தில் ஜால்ரா போடுகின்றனர். தி.மு.க.,வில், கூட்டணி கட்சியினருக்கு மரியாதை இல்லை. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் சேருபவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement