நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்

19


மயிலாடுதுறை: ''நேர்மையாக இருந்த காரணத்துக்காக இவ்வளவு சிக்கலை சந்திக்க வேண்டுமா,'' என்று வாகனம் பறிக்கப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., சுந்தரேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது புகார்களை மாவட்ட போலீஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். சட்டவிரோத சாராயம், மது கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்ததுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 700 பேரை சிறையில் அடைத்தார். தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

நடை பயணமாக



இந்நிலையில் சுந்தரேசன் பயன்படுத்திய அரசு வாகனம் மாவட்ட காவல்துறையால் திரும்ப பெறப்பட்டது. முதல்வர் வருகைக்கு முன்னர், அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்பு பணி செல்வதற்கு சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறை, மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனம் வழங்கவில்லை.


இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்த வீடியோ, போலீஸ் குரூப்பில் பதிவிடப்பட்டது. வாகனம் எதுவும் இல்லாததால் இன்று சுந்தரேசன் தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு நடந்து சென்றார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகின.

விளக்கம்



இது தொடர்பாக சுந்தரேசன் கூறியதாவது:
கடந்த 5ம் தேதி அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்பு பணிக்கு எங்களின் வண்டியை கேட்டனர். ஆனால் புரோட்டோக்காலில் கிடையாது. இதனால் வண்டியை தர மறுத்துவிட்டேன்.
அவ்வாறு வாகனம் கேட்டால், அதற்கு ஒரு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஏ.டி.ஜி.பி., ஜெயராமனுக்கு ஒரு பிரச்னை வந்தது. உத்தரவு இல்லாமல் வாகனம் வெளியில் சென்ற பிரச்னை. எனவே, நான் உத்தரவு தரும்படி கேட்டேன்.

ஆனால், வாகனம் கொடுக்கவில்லை என்பதற்காக எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து என்னை மைக்கில் கூப்பிட்டனர். என்னை உடனே திருச்செந்தூர் பாதுகாப்பு பணிக்கு செல்லும்படி கூறினர். நானும் சென்றேன். 7ம் தேதி பணி முடிந்தது.
மீண்டும் எஸ்பி அலுவலகத்தில் அழைத்து திருவாரூர் பாதுகாப்பு பணிக்கு செல்லுமாறு கூறினர் அதையும் 3 நாள் பார்த்துவிட்டு
மீண்டும் மாவட்டத்துக்கு நுழைந்த போது, எனது வாகனத்தை மெய்யநாதன் கான்வாய்க்கு மீண்டும் கேட்டனர்.

நான் ஒன்றும் சொல்லவில்லை. 'கொடுப்பதில் பிரச்னை இல்லை. வாகனத்தில் பிரச்னை உள்ளது. பார்த்து கொள்ளுங்கள்' என கொடுத்துவிட்டேன்.10ம் தேதி கொடுத்தேன். இன்று வரை அந்த வாகனம் கொடுக்கவில்லை. நான் பைக்கில் போனேன். எல்லாம் பண்ணேன். ஒரு கட்டத்துக்கு பிறகு, சொந்த வாகனமும் இல்லை. மற்ற போலீசிடம் இரவல் வாங்க முடியாது. இதனால் நேற்றும், இன்றும் அலுவலகத்துக்கு நடந்து போனேன்.

பணம் நின்றது



மயிலாடுதுறை, சீர்காழியில் 1,200க்கு மேல் மதுவிலக்கு வழக்குப் போட்டுள்ளேன். 700 பேரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளேன். 5 பேரை குண்டர் சட்டத்தில் போட்டுள்ளோம் . காரைக்கால் எல்லைப் பகுதி என்பதால் தீவிர வாகன சோதனை செய்து கட்டுப்படுத்தி உள்ளோம். அதிகாரிகளுக்கு சரியான பைசா பணம் சென்று சேரவில்லை. எல்லாம் நின்றுவிட்டது. நான் கடந்த நவ., மாதம் முதல் சாராயம் கடத்தல் போக்குவரத்து நின்றுவிட்டது. இதனால் சாராய பணம் கிடைக்கவில்லை.

நேர்மை



எஸ்.பி., என்னை கூப்பிட்டு, 'வளைந்து கொடுங்கள். இல்லை என்றால் உடைத்து விடுவார்கள்' என கூறுகிறார். ஒரு அதிகாரியிடம் பேசும் பேச்சா இது? இதுபோன்ற அதிகாரிகளிடம் நாங்கள் எப்படி வேலை செய்வது? நான் நேர்மையாக இருந்த காரணத்துக்காக இவ்வளவு சிக்கலை சந்திக்க வேண்டுமா?
நான் மனித உரிமை ஆணையத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளேன். நான் யாரிடம் பணம் வாங்குவது கிடையாது. நேர்மையாக வேலை செய்துள்ளேன்.

எனது அலுவலகம் மோசமான நிலையில் உள்ளது. கழிவறை கூட கிடையாது. நான் கஷ்டப்படுகிறேன் என்பதற்காக எஸ்.ஐ., ஒருவர் தனது வீட்டில் இருந்த ஏசியை கொடுத்தார். அதுவும் பழைய ஏசி தான்.
எஸ்.பி., நேற்று என்னை அழைத்து, ' சுந்தரேசன் எனக்கும் உங்களுக்கும் எந்த வித பிரச்னையும் கிடையாது. உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்குமாரும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யும் தான் உங்களை 'டார்ச்சர்' செய்ய சொல்கின்றனர்' என கூறுகிறார். இது எந்தவிதமான நியாயம்?


@quote@நான் மனித உரிமை ஆணையத்தில் அஸ்ரா கார்க் ஆட்கள் மீது புகார் கொடுத்தேன் என்பதற்காக என்னை இவ்வளவு டார்ச்சர் செய்கின்றனர். தொந்தரவு செய்கின்றனர்.quoteஇவ்வாறு அவர் கூறினார்.



@block_B@

போலீசார் மறுப்பு

இந்நிலையில், போலீசார் இதனை மறுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., ஆக பணியாற்றும் சுந்தரேசனுக்கு அலுவலக பணிகளை மேற்கொள்ள கடந்த ஏப்., 7 ம் தேதி முதல் பொலிரோ வாகனம் வழங்கப்பட்டது. முக்கிய அலுவலக பணிக்காக கடந்த 11ம் தேதி அந்த வாகனம் எடுக்கப்பட்டு மாற்று வாகனம் வழங்கப்பட்டது. இன்று மீண்டும் பழைய வாகனம் வழங்கப்பட்டது. ஆனால், சுந்தரேசன் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து வருவது போன்றும், அவருக்கு மாவட்ட போலீஸ் சார்பில் வாகனம் வழங்கப்படவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்திகள் சில ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இவ்விதமான தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். செய்திகளை வெளியிடுவதற்கு முன்பு உரிய அதிகாரிகளிடம் அது தொடர்பான தகவல்களை கேட்ட பின்பு சரியான தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.block_B

Advertisement