தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து

73

சென்னை: பொது அரங்கில் பேசும்போது மூத்த திமுக தலைவர்கள் நாவடக்கத்துடன் பேசுவது நல்லது என்று, காமராஜரின் கொள்ளுப்பேரன் காமராஜ் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை



சென்னை பெரம்பூரில் நேற்று முன்தினம்( ஜூலை 15) நடந்த கூட்டம் ஒன்றில் தி.மு.க., எம்.பி., திருச்சி சிவா பேசும்போது, காமராஜருக்கு 'ஏசி' இல்லையெனில் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி அமைக்க உத்தரவிட்டதாக கருணாநிதி கூறினார். தன்னை எதிர்த்து பேசினாலும், அவரது உடல்நிலையை கருதி நான் உத்தரவிட்டேன் என்றும் கருணாநிதி என்னிடம் கூறினார். மேலும் ,கருணாநிதியின் கையை பிடித்துக்கொண்டு உயிர் போவதற்கு முன்பு, ''நீங்கள் தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியதாக தெரிவித்து இருந்தார்.


இதற்கு தமிழகம் திருச்சி சிவாவுக்கு கண்டனம் எழுந்தன. அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.

ஏழைப்பங்காளன்



இந்நிலையில், காமராஜரின் இறுதிச்சடங்கை செய்த அவரது பேரன் கனகவேல் என்பவரின் மகன் காமராஜ் இந்த விவகாரம் தொடர்பாக கூறியதாவது: வாழ்ந்து மறைந்தவர்களை பற்றி பேசும்போது திருச்சி சிவா போன்ற ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதிகள் சரியான தகவலை வெளியிடுவது நல்லது என்று நான் நினைக்கிறேன்.பெருந்தலைவர் அவர். ஏழைப்பங்காளன் என்று எல்லாராலும் போற்றப்படுபவர். அவர் ஏசி.,யில் தான் வாழ்ந்தார் என சொல்வது போன்று சிவாவின் பேச்சு அமைந்துள்ளது.


உதாரணத்துக்கு நான் கல்லூரியில் படிக்கும் போது கருணாநிதி முதல்வராக இருந்தார். ஈழத்தமிழர் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தார். இதனை 10 ஆண்டு கழித்து நான் கூறும்போது, ' ஈழத்தமிழர் பிரச்னைக்காக 2 ஏர் கூலர்களுடன் கருணாநிதி ஒரு மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தார்,' என்று நான் சொன்னால் வரும் தலைமுறையிடம்,அது எப்படி போய் சேரும். கேலி செய்வது போன்று அமையும். அந்த நோக்கத்தையே நாம் தோற்கடிக்கும் போன்று இருக்கும். அது போன்று பெருந்தலைவர். ஏழை பங்காளர் அவர். ஏசியில் தான் வாழ்ந்தார் என சொல்வது ஒத்துக் கொள்ள முடியாது.


காமராஜர் வயது உடல்நிலை கருதி வேறு நோக்கத்தில் பேசியிருக்கலாம். அதை வந்து இவர் பொது சபையில் பேசும்போது வேறு மாதிரி பேசியிருக்கலாம் என்பது எனது கருத்து.

புத்தகத்தில் உண்மை



காமராஜர் கடைசி காலத்தில், நான் பிறந்து 4 மாத கைக்குழந்தை . நான் பார்த்தது கிடையாது. அவரின் நேர்முக உதவியாளர் வைரவன் . அவருடன் கூட இருந்தவர். எனது அப்பா, பெருந்தலைவர் பேரன். இறுதிச்சடங்கு செய்தவர். அப்பாவும் உயிருடன் இல்லை. காமராஜருடன் இருந்தவர் யாரும் உயிருடன் இல்லை. அவரை பற்றி முழுதாக தெரிய வேண்டும் என்றால், அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய முருக தனுஷ்கோடி எழுதிய புத்தகத்தை படித்து பார்த்தால் உண்மை தெரியும். அதேபோன்ற கோபண்ணாவும் புத்தகம் எழுதியுள்ளார்.


இதை பார்த்தாலே உண்மை தெரியும், காமராஜர் ரேஷன் அரிசியை சாப்பிட்டார். சாதாரண இடத்தில் தான் படுத்து தூங்கினார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் இருக்கும் இடம், திருமலைப்பிள்ளை வீடு வாடகை வீடுதான். முதல்வராக இருப்பவர் வாடகை வீட்டில் இருந்தார். அந்த வீட்டு உரிமையாளரே ஏசி போட்டு கொடுத்து இருக்கலாம். அதற்காக ஏசி போட்டு தூங்கினார் என்பது அர்த்தம் கிடையாது.

சந்தேகம் இல்லை



விருதுநகரில் அவர் பிறந்த வீடு மிகவும் சிறியது. அங்கு மின்விசிறி போடுவதற்கு வசதி கிடையாது. தண்ணீர் போட்டு கொடுத்ததற்கே எடுத்து தள்ளி வைக்க சொல்லியது அனைவருக்கும் தெரியும். அந்தளவுக்கு எளிமையான மனிதர். மக்களின் பணத்தை வீணடிக்க மாட்டார். திருமலைப்பிள்ளை சாலை வீடு நினைவில்லம். கீழ் ஒரு அறையில் ஏசி இருக்கும். ஆனால், பெரும்பாலும் மேல் உள்ள படுக்கை அறை தான் பயன்படுத்துவார். உயிர் போன அன்றுதான் கீழ் படுக்கை அறையில் படுத்து தூங்கினார்.


முதல்வராக இருந்தவர் வீட்டில் ஏசி இருப்பது சாதாரண விஷயம். அதுவும் 72 வயதில், வேர்வை பிரச்னை, இருதய பிரச்னை உள்ளது என டாக்டர் கூறியுள்ளார். இந்த விஷயம் பெரிதுபடுத்த வேண்டிய விஷயம் அல்ல. ஏசி பயன்படுத்தினாரா? இல்லையா ? என்பது சர்ச்சைக்குரிய விவாதப்பொருளாகி உள்ளது. அவர் ஏசி பயன்படுத்தினாலும் இல்லை என்றாலும் அவர் ஏழைப்பங்காளன் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

சர்ச்சை பேச்சு



அரசியலில் ஒரு பிரச்னையை மறைக்க புது பிரச்னையை கொண்டு வருவார்கள். அதுபோன்ற நிகழ்வாக தான் இதனை பார்க்கிறேன். இதை சொன்னவர் யார் என பார்க்க வேண்டும். சமீபத்தில் அமைச்சர்கள் எங்கு எதை பேசுவது என்பதை தெரியாமல் பேசுகின்றனர் என்பது வருத்தத்துக்குரிய விஷயம். முதல்வருக்கு வேண்டுகோளாகவும் வைக்கிறேன். அமைச்சர் ஒருவர் பேசும்போது, 'நின்றால் நாமம், படுத்தால் பட்டை ' என்கிறார். இது பொது அரங்கில் பேசும்போது மூத்த தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேசுவது நல்லது.அவர்கள் மீதான சில குறைகளை போக்குவதற்கு காமராஜர் பெயரை பயன்படுத்தினார்களோ என்ற சந்தேகம் உள்ளது. இவ்வாறு காமராஜ் கூறினார்.

காங்கிரசாருக்கு தெரியும்



' கருணாநிதி கையை பிடித்து காமராஜர் கடைசி காலத்தில் நீங்கள் தான் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்' என திருச்சி சிவா கூறியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், இரண்டு பேரும் உயிருடன் இல்லை. கருணாநிதியும் இல்லை. காமராஜரும் இல்லை. இரண்டு பேருக்குள் நடந்த நிகழ்வை திருச்சி சிவா சொல்வது என்பது எந்தளவு உண்மை என்பது இருவருக்கு மட்டும் தெரியும். காமராஜர் மீது கருணாநிதி பரஸ்பரம் மரியாதை வைத்து இருந்தார் என்பது ஊரறிந்த உண்மை. காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது தி.மு.க, அரசு தான் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. அனால் கையை பிடித்து சொன்னாரா என்பது தெரியாது. காமராஜர் பற்றி காங்கிரசாருக்கு தெரிந்ததை விட தி.மு.க.,வினருக்கு அதிகம் தெரிந்து இருக்காது என்பது எனது கருத்து. காங்கிரசார் சொல்வது சரியாக இருக்கலாம்.

பிரச்னையை பெரிதாக்க வேண்டாம் என திருச்சி சிவா கூறியுள்ளார். வயது முதிர்வு காரணமாக வாய் தவறி பேசியிருக்கலாம் என கருதுகிறேன். சிவா படித்த பண்புள்ள மனிதர் என்பது பார்லிமென்ட் நடவடிக்கைகளை பார்க்கும்போது தெரிகிறது. அதனால் இது வேண்டும் என்றே நடந்த சம்பவம் போல் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement