கொடிய விஷமுடைய பாம்புடன் ரீல்ஸ்... பாம்புபிடி வீரருக்கு நேர்ந்த சோகம்

7

போபால்: மத்திய பிரதேசத்தில் கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்புடன் பாம்பு பிடி வீரர் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார்.


குணா மாவட்டத்தைச் சேர்ந்த தீபக் மஹாவர்,42, என்பவர் பாம்பு பிடிக்கும் வேலையை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம்(ஜூலை 15) மதியம், பர்பத்புரா கிராமத்தில் புகுந்து கொடிய விஷத்தன்மை கொண்ட பாம்பை பிடிக்க அழைப்பு வந்தது.


சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பாம்பை பிடித்த நிலையில், அவரது மகனை பள்ளியில் இருந்து அழைத்துச் செல்ல போனில் அழைப்பு வந்தது. உடனே, பிடிபட்ட பாம்பை தனது கழுத்தில் சுத்தியபடி, மகனை அழைக்க பள்ளி அருகே சென்றுள்ளார். அப்போது, அவரை பார்த்தவர்கள் தங்களின் செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அவரும் பாம்பை சீண்டி சீண்டி போஸ் கொடுத்தார்.


பிறகு மகனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, பாம்பு தீபக்கின் கையில் கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனை அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.


இந்த சம்பவம், பாம்புகளை கையாளும் அனைவருக்கும் ஒரு பாடம். விஷமுடைய பாம்பை பிடிப்பவர்கள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement