சட்டவிரோத கிட்னி கொள்ளை: உயர்நிலைக்குழு விசாரணை தேவை என்கிறார் அன்புமணி

சென்னை: சட்டவிரோத கிட்னி கொள்ளை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணை வேண்டும் என்று பா.ம.க., தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப் பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ. 1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தான் இது குறித்து விசாரணை நடத்தப்போவதாக நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.இதையெல்லாம் கூட அறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழக அரசு நீண்டகாலமாக உறங்கிக் கொண்டிருந்து விட்டு இப்போது துறை சார்ந்த விசாரணை நடத்தப்போவதாக கூறுகிறது. அதில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
'யாராக இருந்தாலும் தப்ப முடியாது': கிட்னி விற்பனை குறித்து அமைச்சர் எச்சரிக்கை
-
நாங்கள் போருக்கு அஞ்சவில்லை: ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேலுக்கு சிரியா அதிபர் பதில்
-
சிங்கக்குட்டியை கொஞ்சும் சலுகை; சீன உணவகத்துக்கு விலங்கு ஆர்வலர்கள் கண்டனம்!
-
ராபர்ட் வாத்ராவின் 43 அசையா சொத்துகளை பறிமுதல் செய்தது அமலாக்கத்துறை
-
நேர்மையாக இருப்பதால் தான் இத்தனை சிக்கல்; ஜீப் பறிக்கப்பட்ட டி.எஸ்.பி., குமுறல்
-
தி.மு.க., தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: காமராஜரின் கொள்ளுப்பேரன் கருத்து